நம் பாரம்பரியம் உறவுகளை என்றும் ஆதரித்து கொண்டு தான் இருந்துள்ளது. எனது வாழ்க்கையில் உறவுகளால் ஏற்பட்ட ஆறுதலும், வேதனையையும் எழுதுகிறேன். மிகவும் நம்பிய உறவுகள் கை விட்ட பொழுது, எங்கோ இருந்து வந்த உறவுகள் ஆறுதல் அளித்துள்ளது. என் பெரியப்பாவின் இரண்டு மகள்களின் திருமண வேலைகளில் என் அப்பாவின் பெரும் பங்களிப்பு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அப்பா அவர் அண்ணன் மகள் திருமண பத்திரிக்கையை உறவுக்காரர்களுக்கு வைப்பதற்கு அதிகாலை 5 மணிக்கு மதுரை வண்டிக்கு கிளம்பி செல்வார். சுமார் 2 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று நான் அப்பாவை வழி அனுப்ப செல்வேன். அதை எங்கள் வீட்டு கல்யாணம் போல் தான் நினைத்து நாங்கள் வேலை செய்தோம். என் அப்பா மட்டும் அல்ல என் அம்மா மற்றும் என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம். அவர்களின் இரண்டாவது மகள் கல்யாணத்தன்று எனக்கு செமஸ்டர் பிரக்டிகல் தேர்வு இருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் சாப்பிடாமல் சென்று அன்று தேர்வு எழுதினேன். வேறு எந்த எண்ணமும் இல்லை என் அக்காவின்(பெரியப்பா மகள்) கல்யாணம் என்ற ஒரு சந்தோசமான எண்ணோட்டம் மட்டும் தான். ஆனால் அவர்களின் பிரதிபலிப்பு என் உடன் பிறந்த அக்கா கல்யாணத்தில் அந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று. பெரியம்மாவிற்கு முதுகு வழியாம். பெரியப்பாவின் மூத்த மகளுக்கு மூன்று நாள் தான் விடுமுறை இருந்ததாம். இரண்டாவது மகளுக்கோ காரணம் கூட தெரியவில்லை. இவர்களுக்கு மத்தியில் ஒரு தூரத்து உறவுக்காரர், அவர் பெயர் மறக்கன்னு. என அக்கா கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எமனின் பாசக்கயிரில் இருந்து தப்பியவர். அவர் நெடுதூரம் பயணம் செய்து என் அக்கா கல்யாணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இங்கே என் மனது வேதனை பட்டது யாருடன்....காயபட்டது யாருடன் என்று சொல்லி தெரிய வேண்டுமா ? நாளை மறு தினம் என் பெரியப்பாவின் மகன் கல்யாணமாம். ஏதோ மூன்றாவது மனிதருக்கு பத்திரிக்கை வைப்பது போல பத்திரிக்கை வந்தது அஞ்சல் வழியாக. நேரில் வந்து திருமண பத்திரிக்கை வைக்க முடியவில்லை என்று என் அப்பாவிடமாவது சொல்லி இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு இல்லை. அப்படியொரு கல்யாணத்தில் கலந்து கொள்வதை விட தவிர்ப்பதே நல்லது என்று முடிவாயிற்று. இருந்தாலும் ஏதோ ஒரு மூளையில் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று என்னோட்டமும் இருக்கிறதை மறைக்க விரும்பவில்லை. இருந்தாலும் பழமொழியை நினைவு கூற வேண்டும் அல்லவா 'மதியாதோர் தலைவாசல் மிதியாதே'. என் உடன் பிறந்த அண்ணனாக தான் என் பெரியப்பா மகனை நினைத்திருந்தேன். அவன் எனக்கு என்று எதுவும் செய்ததில்லை. என் கல்லூரி படிப்பை முடித்து நான் 18 மாதங்களாக வேலை தேடி கொண்டிருந்தேன். ஒரு நாள் கூட நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டது கூட கிடையாது. முன்னொரு தடவை satyam computer services written test இல் தேர்வானால் என்னிடம் சொல்லிருந்தால் நான் உதவி செய்திருப்பேன் என்று என் பெரியப்பா மகன் என் அக்காவிடம் சொல்லியதை நினைவு கூர்ந்து என்னிடம் நான் தேர்வானதும் என் அக்கா சொல்லியுருந்தார். நான் என் அண்ணனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் என் பெரியம்மா எடுத்தார்கள், சாயுங்காலம் அண்ணன் வந்ததும் தொடர்பு கொள்ள சொல்கிறேன் என்றார். நான் சாயுங்காலம் எப்படியும் என் அண்ணன் என்னை தொடர்பு கொள்வார் என்று நினைத்தேன். நாட்கள் கடந்தது, ஆனால் அவரிடம் இருந்து ஒரு தகவல் கூட வரவில்லை. ஆனால் அதற்காக வருத்த படவில்லை. என் அண்ணனை பட்ட பெயர் சொல்லி என் முன்னால் சொன்னவரிடம் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு உதவி செய்யவில்லை என்று வருத்தப்படவில்லை ஒரு சின்ன ஏமாற்றம் அவ்வளவுதான். நான் வேலை தேடிய காலத்தில் ஒரு மீன் விற்பவர்(பெயர் ரவி, இலங்கை அகதி) என்னிடம் bio-data கேட்டார் அவர் உறவினர் மூலம் உதவி செய்வதற்காக. என் 21 வயது வரை சித்திரக்கனி சித்தப்பாவை பார்த்தது கூட கிடையாது. நான் வேலை தேடி கஷ்டபடுகிறேன் என்று கேள்வி பட்டு, என் அப்பாவை தொடர்பு கொண்டு, என்னை ஹைதராபாத் வர சொன்னார். அவர் வீட்டில் தங்கி வேலை தேடுமாறு சொன்னார். என் அண்ணன் ரமேஷ், ராஜேஷ், மற்றும் என் தம்பி சுரேஷ் நன்றாக பழகினர். என் சித்தி என்னை தன் மகன் போலவே கவனித்து கொண்டார். முருகானந்தம் சித்தப்பா என்னிடம் நன்றாக பழகுவார். எல்லாம் எனக்கு புதிதாக அறியப்பட்ட உறவுகள். என்னை ஆதரித்த உறவுகளுக்கு நன்றி சொல்வதற்காக இதை எழுதுகிறேன். குறிப்பாக ரவிக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். ரவியின் மகன் கணியூற்றனி நன்றாக இருக்க வேண்டும் என்று என் இறை பிரார்த்தனையில் வேண்டுகிறேன். அதற்காக காயபடுதியவர்களை வசை பாட விரும்பவில்லை.........அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம.
Friday, December 4, 2009
Tuesday, November 10, 2009
பெண்களிடம் காதல் சொல்ல வேண்டிய தருணம்... ரேடியோ தொகுப்பாளரின் ஆலோசனை.. :)
வழக்கமாக நான் வேலையில் இருந்து திரும்பும் நேரம் இரவு 10 மணி நெருங்கி கொண்டிருக்கும். என் மொபைல் போனில் ஏதோ ஒரு ரேடியோ அலைவரிசையை வைத்து கொண்டு பயணம் செய்வேன். நேற்று ஒரு சுவாரசியமான அறிவுரை வழங்கிய அந்த தொகுப்பாளர் சொன்னதை இங்கே எழுதிகிறேன். ஏதோ ஒரு நபர், அவர் நெருங்கி பழகும் தோழியிடம் காதல் கொண்டுள்ளாராம். அதை எப்படி அந்த பெண்ணிடம் சொல்ல வேண்டும் என்று ஆலோசனை கேட்டு அந்த ரேடியோ தொகுப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏதோ ஒன்று சொல்ல போக, அந்த பெண்ணின் நட்பை இழக்கவும் அந்த நபருக்கு விருப்பம் இல்லையாம். இதோ அந்த ரேடியோ தொகுப்பாளர் சொன்ன ஆலோசனைகள். ஒரு பெண்ணிடம் காதல் சொல்லுவதற்கு நேரம் பார்த்து சொல்ல வேண்டுமாம். அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தோன்றும் நேரம் பார்த்து அந்த பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமாம். காதலிக்கும் நபர் அந்த பெண்ணிடம், அவள் பார்ப்பதற்கு தேவதை மாதிரி இருக்கிறாள் என்று அடிக்கடி பொய்யையாகவே இருந்தாலும் சொல்ல வேண்டுமாம். பின்பு அந்த பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எல்லா சமயங்களிலும் நாம் எடுத்த பேச கூடாதாம். சில நேரங்களில் அதை தவிர்த்து, சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு மன்னிக்கவும் தான் சற்று வேறு வேலையில் இருந்ததால் உன்னுடன் பேச முடியவில்லை என்று ஆரம்பித்து பின் புன்முறுவலுடன் பேச வேண்டுமாம். பின் நேரில் சந்திக்கும் பொழுது எல்லாம் அந்த பெண்ணின் கண்களை பார்த்து பேச வேண்டுமாம். அந்த பெண், அந்த நபர் தன்னிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அவள் என்னும் நேரம் பார்த்து காதலை சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனைகள் அந்த ரேடியோ தொகுப்பாளருக்கு. இதை எழுதுவது அந்த ரேடியோ தொகுப்பாளர் சொல்வது உண்மையேயானால் வேறு யாருக்காவது உதவட்டுமே என்று தான் :) எப்படி தான் யோசிக்கிறாங்களோ ?
Tuesday, November 3, 2009
இலங்கையின் போர் குற்றம்.....நிரூபிக்கப்படுமா ?
இலங்கையில் நடந்த இன படுகொலைக்கு காரணம்...மற்றும் போதிய ஆதாரம் வேண்டுமாம் இலங்கையை ஆளுபவனை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்துவதற்கு. இதற்க்கு துணை நின்ற இந்திய மற்றும் சீன அரசாங்கமும் கூட போர் குற்றவாளிகள் தான். எதற்காக இந்திய துணை போக வேண்டும் ? தமிழனை காப்பாற்றுவதற்கு வழி வகை செய்யாதவருக்கு தமிழ் செம்மொழி மாநாடு நடத்த வேண்டுமாம் தமிழை காப்பாற்றுவதற்கு. இதற்க்கு ஒப்பனையாக கூற வேண்டுமானால் 'கண் கெட்ட பின்பு சூரிய நமச்காரமாம்' என்று ஒரு பழமொழி உண்டு. இந்தியா ஏன் இந்த இன படுகொலைக்கு துணை போக வேண்டும் ? ஒரு உயிர் போனதற்கு வஞ்சம் தீர்க்கவா ? எத்துனை லட்சம் உயிர்கள் மண்ணோடு மானாக சிதைந்துள்ளது? எத்துணை சிறார்கள் தன் தாய் தந்தையரை இழந்திருப்பர் ? அங்குள்ள தமிழனின் நிலை மட்டும் தான் அப்படியா என்றால் ... இங்குள்ள கடலோர மீனவ தமிழனின் நிலையும் மோசம். இலங்கை கடற்படை குண்டுகளுக்கு இரையாகி விடுவானோ என்ற நிலைமை. இந்திரா காந்தி கச்சதீவை யாரை கேட்டு தாரை வார்த்து கொடுத்தார் ? இரு நாட்டை நல்லுறவை வலுபடுத்தவா ? காயப்படுவது யார் என் தமிழன் தானே ? இதற்க்கு போராட்டம் அறிவித்தால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக போராடாது. ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு மாவட்டத்தில் போராட்டம் அறிவிக்கும் இங்குள்ள குடிமக்களுக்கு பறை சாற்றுவதற்கு 'நாங்களும் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு. இங்கே தேர்தலுக்கு முன்னே வாக்குறுதி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? இலங்கையில் தனி நாடு அமைப்போம் என்று அறைகூவல் விடுத்தார்கள் எங்கே ? அடுத்த தேர்தல் வரும் அப்பொழுதும் இதே மாதிரி வாக்குறுதிகள் வரும், நம் மக்களும் யார் தன் ஓட்டிற்காக அதிக பணம் கொடுத்தாரோ அவருக்கு விசுவாசம் காட்டி விட்டு திரும்புவர். நான் எல்லா மக்களையும் குறை கூறவில்லை. பெரும்பான்மையான மக்களின் பிரதிபலிப்பை சொல்கிறேன். இங்கே அரசியல் நடுத்துபவன் என்றும் பல்லக்கில் பயணம் செய்வான். அடுத்த ஐந்தாண்டு காலம் பல்லக்கை தூக்கி செல்பவனாக தான் மக்கள் இருக்கின்றனர். இலங்கையில் ஆளுபவனும் இனி வரும் காலத்தில் விடுதலை புலிகளை ஒழித்த ஒரே அரசியல் தலைவன் என்று சொல்லி தன் அரசியல் ஆசனத்தை தக்க வைத்து கொள்வான். பொன்செகோ தன் இரு நாட்டு பிரஜை(Dual Citizenship) அங்கீகாரத்தை நிலை நிறுத்தி கொள்ள போராடுகிறார். ஏன் இதை பயன் படுத்தி அவரும் அரசியல் ஆதாயம் தேடலாம். மனித உரிமை மீறப்பட்ட இலங்கை போருக்கு ஆதாரம் கேட்கும் எல்லோரும் மூடர்களே. என் கண்ணோட்டத்தில் ஐக்கிய நாட்டு சபை தலைவர் பான்-கீ-மூனுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதினை கொடுத்திருக்கலாம். உலகத்தில் அமைதியை நிலை நாட்டியதர்க்காக அல்ல...அதிகாரம் இருந்தும் தன் கண் முன்னே நடந்த இன படுகொலையை கண்டு அமைதி காத்ததற்காக.
Friday, October 30, 2009
சிவாஜி படம் முதல் நாள் பார்த்த அனுபவம்...
சிவாஜி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எல்லோரிடம் நிலை கொண்டிருக்க, நானும் அந்த படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்று ஆவல் இருந்தது. சரி பதிவு செய்து படம் பார்க்கலாம் என்று திரையரங்குளுக்கான இணைய தளத்திற்கு சென்று பார்த்தால், எங்கும் கிடைக்கவே இல்லை. சரி திரைப்படம் வெளியான இரண்டு வாரம் கழித்து பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு 7 மணி போல லக்ஷ்மணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாப்ளே, சிவாஜி படத்திற்கு 2 டிக்கட் இருக்கு, போகலாமா? என்றான். சரி என்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் விடை பெற்று கொண்டு, கேசவன், நான் மற்றும் லக்ஷ்மணன் படத்துக்கு போவதற்கு தயாரானோம். நங்கநல்லூர் வெற்றி திரையரங்குக்கு பதிவு செய்திருந்தோம். மூவரும் ஒரே வண்டியில் பயணம் செய்தோம். நல்ல வேளை, போக்குவரத்து காவல் துறையினரிடம் பிடிபடவில்லை. திரையரங்கின் தெரு முனையிலே கூட்டம் அலை மோதியது. நம்மிடம் தான் பதிவு செய்த டிக்கெட் இருக்கிறதே என்று கூட்டம் இருந்த திசை நோக்கி நடந்தோம். இருக்கும் கூட்டத்தை பார்த்தால், திரையரங்கின் நுழைவு வழி அருகே இருந்தால் தான் உள்ளே போக முடயும் என்றும் முந்தியடித்து கொண்டு நுழைவு வாயில் அருகே சென்றோம். நுழைவு வாயிலை திறந்தால் நாங்கள் முதல் அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணம் மட்டுமே எங்கள் முன்னே இருந்தது. சுமார் 45 நிமிடமாவது அங்கே நின்று கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து அந்த திரையரங்கில் வேலை பார்ப்பவர் எங்கள் சீட்டை பார்த்து, நீங்கள் போக வேண்டிய திரையரங்கு இது அல்ல...பக்கத்தில் உள்ள திரையரங்கு என்றார். எங்களுக்குள் சிரிப்பு அடக்கவே முடியவில்லை......ஏனென்றால் எங்களுக்குளே யார் முதலில் உள்ள போவார்கள் என்ற போட்டி வேறு....சரி என்றும் பக்கத்தில் உள்ள திரையரங்கிற்குள் போனாள், அங்கே கூட்டத்தை கட்டு படுத்த காவலாளிகள் எல்லாம் பனியில் இருந்தனர். பின் அங்கும் ஒரு மணி நேரம் காத்து கிடந்தது அந்த படத்தை பார்த்து முடித்தோம். படத்தில் பிரம்மாண்டம் அதிகம்...ரஜினிக்கே உரிய அந்த ஸ்டைல். மொத்தத்தில் எங்கள் பொழுது நன்றாக கழிந்தது... :)
விஜயகாந்தின் மறைவு - ஒரு சோகமான நிகழ்வு.
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது வீட்டில் இருந்து சென்று வந்தேன். விஜயகாந்தும் என் கல்லூரியில் தான் படித்து வந்தான். அவனும் நானும் அவரவர் வண்டியில் ஒன்றாக செல்வோம். அவன் தமிழ் வழியாக 12(+2) வரை படித்தவன். ஆகையால் அவனுக்கு பொறியியல் பட்ட படிப்பு படிக்கும் பொழுது கஷ்டமாக இருந்தது என்று என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக மோசமானதாக இருக்கும். அந்த சாலையில் (உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சாலையே கிடையாது) கூட விரட்டி அடித்து கொண்டு போவான். என்னால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சமயம் அவனை போக சொல்லி விட்டு வழக்கமான எனது வேகத்தில் வருவேன். நாங்கள் பயணம் செல்ல வேண்டிய 10 கி.மீ நடுவே இரண்டே ஊர்கள் தான் இருக்கும். அது லட்சுமியாபுரம் எனும் புல்லாபட்டி மற்றும் கீழான்மறைநாடு. ஒரு நாள் அவன் வேகமா திரும்பி வருகையில், வந்த வேகத்தில் ஒரு கோழி அவன் வண்டி மீது மோத, எமதர்ம ராஜா அந்த கோழிக்கு பாச கயிறு வீசி விட்டார் போல. ஊர் மக்கள் எல்லாம் அவனை தகாத வார்த்தையில் வாசனை மழை பொழிய நான் கூடத்திற்கு நடுவே சென்று பார்த்தால், மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். எனக்கு தெரிந்தவர் வாயிலாக அவனை அந்த கூட்டத்தில் இருந்து விடுவித்து கூட்டி சென்றோம். அன்றில் இருந்து என் வேகத்திற்கு அவன் மாறி என்னுடன் பயணம் செய்வான். ஏதோ பேசி கொண்டே பயணம் செய்வோம். இப்படியே நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள் கல்லூரி விட்டு திரும்பும் நேரம் சோகமாக இருந்தான். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கவலையாக இருந்தான். சரி என்று இரண்டு பெரும் கிளம்பினோம். வரும் வழியில் சாதரணமாக பேசி கொண்டு வந்தான். நாங்கள் ஆலங்குளம் வந்த பொழுது மணி 6:30 இருக்கும். நானும் அவனும் பிரியும் இடம் வந்ததும் இரண்டு பெரும் விடை பெற்று கொண்டோம். ஆனால் அது தான் கடைசியாக பெறக்கூடிய பிரிவினை என்று எனக்கு தெரியவில்லை. என் அப்பா வேலையில் இருந்து 12 மணிக்கு திரும்பி வந்ததும், என்னை எழுப்பி ஒரு அதிர்ச்சி தகவல் தந்தார் விஜயகாந்த் 6:45 மணிக்கு காலமாகி விட்டதாக. எப்படியும் அவன் வீட்டிற்கு செல்ல குறைந்தது 6:35 மணியாவது ஆகியிருக்கும். இடையில் 10 நிமிடத்தில் ஒருவனுக்கும் மரணம் ஏற்படுவது என்றால் வாழ்கை இவ்வளவு தானோ என்று தோன்றுகிறது. இதற்க்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியாமல்......முடித்து கொள்கிறேன்.
சென்னையில் ஒரு மழை காலம்...
நான் வெளிவர இருக்கும் சென்னையில் ஒரு மழை காலம் திரைப்படம் பற்றி எழுதவில்லை. நேற்று முன்தினம்(28/10/2009) அன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. நான் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருக்கும் பொழுது வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைவது என்பது எனக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எனக்கு மழையில் நனைவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரியில் படிக்கும் பொது என் வீட்டில் இருந்து தான் போய் வந்தேன். அப்பா எனக்கு TVS Champ வாங்கி கொடுத்திருந்தார். ஆலங்குளத்தில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் பாதை மிக மோசமாக இருக்கும். எனது பயணம் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள காட்டு பகுதிக்கு நடுவே தான். கீழராஜகுலராமனுக்கும் செவல்பட்டிக்கும் நடுவே சாலை என்பதே கிடையாது. இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு இருக்கும். எப்பொழுதாவது மழை பெய்தால் மட்டுமே அந்த ஆற்றில் தண்ணீரை பார்க்க முடியும். வேறு வழியாக செல்ல வேண்டும் என்றால் வெம்பகொட்டை வழியாக போகலாம். மழை நேரங்களில் நான் நனைந்து கொண்டே தான் பயணம் செய்வேன். மழைக்காக என்றும் நான் கல்லூரி சென்ற நாட்களில் ஒதுங்கியதே இல்லை. நான் மட்டும் மழையில் நனைந்து கொண்டே செல்லும் பொழுது ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்து கொண்டே பயணம் செய்வதில் இருக்கும் சுகமே தனி தான். அந்த தருணம் எனக்கு நானே இளையராஜா, எனக்கு நானே ஒரு S.P.B ஆக நினைத்து கொள்வேன். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நனைந்திருந்தாலும் கூட.. ஆலங்குளத்தில் உள்ள சங்கரேஷ்வரி டீ ஸ்டாலில் ஒரு டீயும் இரண்டு வடையும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் பொழுது வழக்கமாக என்னிடம் 'தம்பி எங்க படிக்கிறீங்க? உங்க வீடு எங்க இருக்கு?' என்று கடைக்காரன் என்னிடம் கேட்பார். நான் முழுவதுமாக நனைந்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் அம்மா எனக்கு தலை துவட்ட துண்டை வைத்து கொண்டு எனக்காக காத்திருப்பார். வேலை தேடி சென்னை வந்த நாளில் இருந்து, அப்படி ஒரு நாளும் மழையில் நான் திரும்ப நனைந்தது இல்லை அதற்க்கான வாய்ப்பும் கிடைத்தது இல்லை. சென்னையில் மழை என்பதே அரிதான ஒரு நிகழ்வாக உள்ளது. நேற்று முன்தினம்(28/10/2009) நீண்ட நாள் கழித்து மழைகளுக்கு நடுவே பயணம் செய்தது மனதிற்கு சந்தோசமாக இருந்தது. என்ன சங்கரேஸ்வரி டீ ஸ்டாலுக்கு பதிலாக cofee vending machine ல பட்டனை அழுத்தி டீ எடுத்து கொண்டிருக்கையில் இதை எழுத வேண்டும் என நினைத்து இங்கே எழுதிகிறேன். எழுதுவதற்கு நடுவே சில சிரிப்புகள்..... எழுதுவதக்கான காரணமும் என்றோ ஒரு நாள் திரும்பி படிக்கையில் கிடைக்க கூடிய அந்த புன்முறுவலுக்கு தான். :)
Friday, October 23, 2009
லோக்ரஞ்சனின் மழலை குரலில் 'கண்ணே கலைமானே' பாடல்
என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற பாடல் 'கண்ணே கலைமானே'. கண்ணதாசனின் பாடல் வரிகள் ஜேசுதாசின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் சிறந்தவர்கள் என்று சொல்வதற்கு எடுத்துகாட்டாக மூன்றாம் பிறை படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். நேற்று அமெரிக்காவில் இருந்து அக்கா என்னை அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, லோக்ரஞ்சன் பாடுவதை கேளு என்றாள். நான் மிகுந்த ஆவலுடன் கேட்பதற்கு தயாரானேன். எந்த ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன் இறை வாழ்த்து சொல்வது வழக்கம். அதை போல லோக்ரஞ்சன் முதலில் 'ஓம் பூர் புவ ஸ்வாகா' மந்திரத்தை கொஞ்சும் மழலை தமிழில் சொன்னான். 25 வயதான எனக்கே அந்த மந்திரம் தெரியாது. அடுத்ததாக 'chubby cheek' னு ஒரு rhymes சொன்னான். நடுவே அக்காவின் குரல் மாமாவிற்கு 'கண்ணே கலைமானே' பாட்டு பாடு குட்டின்னு சொன்னதும், அந்த இன்னிசை ராகம் ஆரம்பித்தது. ஒரு பாடல் கேட்க சுருதி, ராகம், சரியான பாடல் வரிகள் எல்லாம் இருந்தால் தான் கேட்க இனிமையாக இருக்குமோ என நினைப்பவர்களுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் பாடும் பாடல் தவறு என்று உணர்த்தும். அதையே லோக்ரஞ்சன் உறுதி படுத்துவது போல அழகாக பாடினான். லோக்ரஞ்சன் பிறந்த 2-3 மாதத்திலே இரவு தூங்குவதற்கு பாட்டு பாடினால் தான் தூங்குவான். அம்மா, அப்பா மற்றும் அக்கா என்னை பாட சொல்லுவார்கள். நான் பாடி அவன் தூங்கிய நாட்களை விட தூங்காத நாட்கள் தான் அதிகம். அவனுக்கு தொலைபேசியில் பதிவு செய்திருக்கும் பாட்டை போட்டு தூங்க வைப்போம். என் அப்பா மிக அருமையாக பாடுவார். ஆனால் பாட சொன்னால் லோக்ரஞ்சனுக்கு நான் பாடும் பழைய பாட்டு எல்லாம் பிடிக்காது என சொல்வார்கள். ஆனால் என் அப்பாவின் குரலுக்கு நான் என்றும் கேட்க விருப்ப படுவேன். என் அப்பா அடிக்கடி பாடும் பாடல் 'எங்கள் திராவிட பொன்னாடு' அல்லது 'செந்தமிழ் தென் மொழியாய்' கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அதை போல இனிமையும் மழலையும் கலந்து பாடும் லோக்ரஞ்சனின் குரலையும் கேட்க என்றும் எதிர்நோக்கி இருக்கிறேன்...
சென்னையில் சுற்றி திரிந்த நாட்கள்...
ப்ராஜக்ட் செய்ய சென்னை வந்திருந்த பொழுது நடந்த சில நினைவுகள். அப்பொழுது மனதில் கவலை எதுவும் தெரியாதவர்களாய் இருந்த நாட்கள். ஷாலோம் ஆண்கள் தங்கும் ஒரு குடியிருப்பில் தங்கி இருந்தோம். வாழ்கையை தேடி சென்னை வந்து தங்கிருந்தவர் மத்தியிலே நாங்கள் இருந்தோம். ஒரு மாதத்திற்கு 8 நபர்கள் தங்க 4000 ரூபாய் கொடுத்து தங்கியிருந்தோம். நாங்கள் ப்ராஜெக்ட் செய்ய போன நாட்களை விட வெளியில் சுற்றி திரிந்த நாட்கள் தான் அதிகம். கில்லி படம் வெளியான நேரம் அது. ஏற்கனவே அந்த படத்தை பார்த்தாலும் நண்பர்களுடன் சென்னையில் பார்க்க வேண்டும் என உதயம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம். பின்பு மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் எல்லாம் போனது மறக்க முடியாது. நாங்கள் அனைவரும் வளசரவாக்கம் Orbit Data Controls ல ப்ராஜெக்ட் செய்தோம். ஏதோ கடமைக்குன்னு போவோம். மொத்தமாகவே ஐந்து நாள் தான் போயிருப்போம். அப்புறம் காசு கொடுத்து பொருள் வாங்கிற மாதிரி ப்ரொஜெக்டை விலை கொடுத்து வாங்கி வந்தோம். இடையில் சென்னையை சுற்றி பார்க்க தான் தினமும் எங்காவது கிளம்பி போவோம். இரவு தூங்குவதற்கு முன்பு யார் தண்ணி குடிக்க போனாலும் அவன் நிலைமை கஷ்டம் தான். எனென்றால் அவன் தான் மற்ற அத்தனை பேருக்கும் தண்ணி பிடித்து குடுக்க வேண்டும். எப்படியும் அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு 15-20 நிமிடம் ஆகும். ஒரு நாள் மகாபலிபுரம் சென்றோம். வரும் வழியில் கானத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாயாஜால் தியேட்டேர் நுழைவு வாயழுக்கு அருகே சென்றோம். சரி படம் பார்த்து போகலாம் என நினைத்து உள்ளே சென்றோம். மொத்தம் எங்களிடம் இருந்த ரூபாய் நானூறை தாண்டாது. உள்ளே சென்று டிக்கெட் விலை கேட்டவுடன், எங்களுக்கு அதிர்ச்சி. நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என்றனர். எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள திரையரங்குகளில் பொதுவாக அதிக பட்சமே 50 ரூபாவை தாண்டாது. சரி என்று வரும் வழியில் சென்னை முதலை பண்ணை சென்றோம். ஐந்து ரூபாய் தான் நுழைவு கட்டணம். ஒரு மணி நேரம் அங்கு கழிந்தது. பின்பு அந்த பண்ணைக்கு பின்புறம் இருந்த கடலுக்கு பக்கத்தில் போய் விளையாடினோம். கடல் அலைகளுக்கு நடுவே எங்கள் பெயர்களை எழுதி வைத்தோம். எங்கள் பெயரை விட பக்கத்தில் இருக்கும் நண்பன் பெயரையும் அவனுக்கு என்று நாங்களாக உருவகபடுத்தி வைத்திருக்கும் பெண் பெயரையும் எழுதி மகிழ்ந்த நாட்கள் என்றும் இனியது. பின்பு அங்கு இருந்து புறப்பட்டு வீடு திரும்பினோம். பின் ஒரு நாள் சென்னையில் வேலை கிடைத்த பின்பு உதயம் தியேட்டேருக்கு தனியாக சென்றேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் நான் ஒரு நாள் கில்லி படம் என் நண்பர்களோடு பார்த்த அதே இடம். ரவி, விஜி, கோபால் அமர்ந்து இருந்த இடத்தில் வேறு யாரோ இருக்க ஒரு வித நன்றி இறைவனுக்கு எனக்கு அதே இருக்கை கொடுத்ததற்கு. இன்றும் நடேசன் தெருவில் பாய் கையேந்தி கடையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சாபிட்டத்தை நினைத்தால் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. இதை எழுதுவதன் நோக்கம் என்றோ ஒரு நாள் திரும்பி படிக்கையில் கிடைக்க கூடிய சந்தோஷத்திற்கு தான்.
Thursday, October 22, 2009
சென்னை முதல் நாள் அனுபவம்...
நான் மற்றும் எனது நண்பர்கள் சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்வதற்க்காக சென்னை வந்தோம். மாலை ஆறு மணிக்கு விருதுநகரில் இருந்து பேருந்தில் கிளம்பினோம். சென்னை வந்து சேர அடுத்த நாள் மதிய வேளை நெருங்கி விட்டது. ஏற்கனவே தங்குவதற்கு ஒரு அறை இருக்கிறது என்று மிதப்பில் வந்து இறங்கினோம். சற்று அதிர்ச்சியான தகவல் நாங்கள் தங்கவிருந்த அறை வேறு யாருக்கோ கொடுத்தாகி விட்டது என்று கேட்டவுடன். சரி வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கும் தருணத்தில் லக்ஷ்மணனை அவங்க அப்பாவின் தொழில்ரீதியான நண்பரை சென்று பார்க்க சொன்னதும் அங்கே சென்று பார்த்தோம். அவர் உதவியுடன் பாண்டி பஜாரில் உள்ள சரவணா லாட்ஜில் இரண்டு அறை தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் அசதியில் எல்லோரும் நன்றாக தூங்கினோம். எங்களுக்குள் இருந்த ஒற்றுமை கொண்டு வந்த பைகள் எல்லாம் ஒரு அறையில் வைத்து கொண்டு, நாங்கள் எல்லோரும் ஒரு அறையில் படுத்து தூங்கினோம். எனக்கு சுமார் 4 மணி போல பசி அதிகம் எடுக்கவே, எங்காவது போய் சாப்பிட்டு வரலாம் என நினைத்து கிளம்பும் நேரத்தில், என்னை இதை எழுத வைத்த அந்த நகைச்சுவை நாயகன் கோபால கிருஷ்ணனும் எழுந்துவிட்டார். இன்னும் இரண்டு நண்பர்கள் எழுந்திருக்கவே நாங்கள் அனைவரும் சாபிடுவதற்கு வெளியில் கிளம்பினோம். இடையே நமது நகைச்சுவை நாயகர் எங்களை எல்லாம் பயமுறுத்தினார். சென்னையில் எங்களை எல்லாம் ஏமாற்றிவிடுவார்கள் என்று. சரி மதுரை பக்கத்தில் இருப்பவன் ஆச்சே, சற்று விவரம் தெரிந்தவனாக இருப்பான் என்று நினைத்தோம். பெரிய பெரிய உணவகத்திற்கு சென்றால் ஏமாற்றி விடுவார்கள், ஆகையால் நான் சொல்லும் உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னார் நம் நகைச்சுவை நாயகர். சரி என்று அவன் பின்னே நாங்களும் தொடர்ந்து சென்றோம். இங்கே போகலாமா என்று எதாவது உணவகத்தை பார்த்து கேட்டால் அவனிடம் இருந்து வந்த ஒரே வார்த்தை ஏமாற்றி விடுவார்கள். சரி என்று நாங்களும் பின்தொடர்ந்தோம். எங்களுது நடை பயணம் ஆரம்பித்த நேரம் 4:30 . எங்கள் நடை பயணம் பாண்டி பஜார் வழியாக ஆரம்பித்து, பனகல் பூங்கா, G.N.செட்டி ரோடு, வடக்கு உஸ்மான் ரோடு, ஹபிபுல்லா ரோடு, திருமலை பிள்ளை ரோடு.....என்று பல ரோடுகள் கடந்து போகவே...நேரமும் சுமார் 6:15 ஆனது. அனைவரும் பொறுமை இழந்து கிடந்தனர். கடைசியாக எல்லோரும் எங்கயாவது சாப்பிட வேண்டும் என முடிவு பண்ணி, கடைசியாக நம் நகைச்சுவை நாயகரிடம் மச்சான் இந்த கடையிலயாவது சாப்பிடுவோம் என்று ஒரு சின்ன கடையை காட்டியதும், சரி என்று ஒப்புதல் வழங்கினார். சரி என்று உள்ளே சென்று சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிடும் பொழுதே அனைவருக்கும் மற்றுமொரு 2 மணி நேர நடை பயணம் இருக்கிறது என்று ஒரு வித சோம்பல் உணர்வு. பசி எனக்கு அதிகமாக இருக்கவே மின்னல் வேகத்தில் சாப்பிட்டு முடித்து வெளியில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு அதே மாதிரி இடத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. சரி என்று கொஞ்சம் தூரம் நடந்து பார்த்தும் எனக்கு தலை கால் சுற்றியது. நாங்கள் சாப்பிட இடம் நாங்கள் தங்கி இருந்த சரவணா லாட்ஜ் ஒட்டியுள்ள சந்தில் இருந்த கடை. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்...இடையில் நடந்த இரண்டு மணி நேர நடை பயணம் அசதி கூட தெரியாமல். இன்னும் பாண்டி பஜார் பக்கம் சென்றால் அந்த சின்ன கடையை பார்க்காமல் வந்ததில்லை. ஒரு சுகமான அனுபவம்.
Thursday, September 24, 2009
லோக்ரஞ்சனுடன் நேற்று சிறிது நேரம்...
Sep 24, 2009: அமெரிக்காவில் இருந்து அக்கா என்னிடம் தொலைபேசியில் பேசினாள். சுமார் ஒரு மாதமாவது இருக்கும் அக்கா, தம்பி மற்றும் அத்தானை பார்த்து. அன்று அத்தான் லேப்டாப் ஐ வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு சென்றிருந்ததாக அக்கா கூறினாள். எனக்கு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அக்கா onlineல இருப்பதாக சொன்ன மறு கணமே skype ல login ஆக முயற்சி செய்தால் என் அலுவலகத்தில் அதை உபயோகப்படுத்த தடை செய்திருந்தார்கள். சரி என்று ஜிமெயில் வீடியோ chat முயற்சி செய்தால் அங்கே server error அடிக்க எனக்கு மட்டும் என் எப்படி நடக்கிறது என்று எனக்கும் என் அக்கா மனதுக்குள் கட்டாயம் இந்த கேள்வி எழுந்திருக்க கூடும். முயற்சி திருவினையாக்கும் என்று மீண்டும் முயற்சி செய்த உடன் என் கண் முன்னே என் அக்கா மற்றும் லோக்ரஞ்சன் webcam மூலம் தெரிந்தார்கள். என்னிடம் webcam இல்லாததால் என் புகைப்படம் மட்டும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். என் புகைப்படத்தை பார்த்த உடன் 'அம்மா ...மாமா..மாமா' என்று என்னை என் அக்காவிடம் அடையாளம் மாறிய அந்த மழலை மொழி கேட்க இனிமையாக இருந்தது........என்னை laptop உடன் ஒட்டி அணைக்க நினைத்த லோக்ரஞ்சனை பார்க்க மனம் ரொம்ப சந்தோசம் அடைந்தேன். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின்பு......அம்மா, அப்பா, பாப்பா அனைவரும் அக்கா மற்றும் குழந்தையிடம் சுமார் இறந்து மணி நேரம் பேசி கொண்டே இருந்தோம். இடையில் எனக்கு பசி தெரியவே இல்லை. நான் இரவு வேலை சாப்பிட்டது நள்ளிரவு 12:15 மணி இருக்கும்......காற்றில் பறக்கும் காகிதம் போல மனம் லேசாக இருந்தது.
Friday, September 18, 2009
தனிமையில் நான்.....
கடந்த சில நாட்களாகவே எனக்குள் தனிமையை உணர்கிறேன். நான் பொதுவாக தனிமையை விரும்பும் மன நிலை கொண்டவன். ஆனால் இன்று அந்த தனிமை ஏனோ என்னை வதைக்கிறது. இதற்க்கு காரணம் லோக்ரஞ்சன்(என் அக்காவின் மகன் - 1.5 வயது எங்கள் வீட்டு செல்ல பிள்ளை). இன்று அவர்கள் எல்லாரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பொதுவாக நான் வீடு திரும்பும் நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்கும். மென்பொருள் துறையில் வேலை செய்பவரின் எழுதப்படாத தலைவிதி. அந்த சமயத்திலும் அவனது ஒரு சின்ன புன்னகை போதும், மரண படுக்கையில் இருப்பவன் கூட மீண்டு எழ தோன்றும். அவனது மழலை உளறல் போதும் ஆயிரம் கவிதைக்கு ஒப்பிடலாம். இன்றும் என்னை சுற்றி என் உடன் பிறந்தோர் மற்றும் என் பெற்றோர் இருக்க.....அந்த வெற்றிடம் மட்டும் நிலையாக இருக்கிறது. அவன் என்னை மாமா என்று எப்பொழுது அழைப்பனோ என்று ஏங்கிய நாட்கள் எத்தனை ? அவனது சின்னஞ்சிறு சேட்டைகள் கூட எனக்கு அழகாய் தான் தோன்றியது. இன்றும் என் அக்கா மற்றும் அத்தானிடம் தொலைபேசியில் பேசும் நடுவே அவனது குரல் கேட்கும் பொழுது மனதினுள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும் மாதிரி ஒரு எண்ணம். நான் காலை பொழுதை அவனது 'லேப்பாப்' (laptop) எனும் மழலை சொல்லை உச்சரிப்பை அழகாய் ரசிப்பேன். நாட்கள் நகர்வதே தெரியாது அவன் என் அருகில் இருக்கையில். லோக்ரஞ்சன் அமெரிக்கா செல்லும் முன்பு 'தம்பி எங்கே போறீங்கனு கேட்டால் ?' அமெரிக்கா என்று சொல்லும் அழகை யார் கேட்டாலும் பரவசம் அடைவர் என்பது உண்மை. 'சரி மாமாவை அமெரிக்கா போன நினைப்பியானு கேட்டால் ?'...நினைப்பேன் என்று அந்த மழலை மொழியில் சொல்லிய சொல்லை என்றும் நான் நினைத்து கொண்டிருப்பேன்........அவர்களின் வருகையை என்றும் எதிர்நோக்கி தனிமையில் நான்.......வாழ்க்கை என்னும் எனது பயணம் தொடர்கிறது.....
Monday, March 2, 2009
72 வயதில் ஓர் இளைஞன்....
நான் ஒரு நாள் மதிய வேளையில் தியாகராய நகரில் இருந்து வேளச்சேரி நோக்கி M7 வழி தடம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஓர் 70 வயது மதிக்க தகுந்த முதியவர் எனக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருந்தார். பயணத்தின் நடுவே அவரது அருகில் இருந்தவரிடம் வேளச்சேரி வந்தால் அவருக்கு தெரிவிக்க வேண்டினார். நான் அவர்களின் உரையாடலுக்கு நடுவே புகுந்து, நானும் அங்கு தான் செல்கிறேன், நான் இறங்கையில் அவரிடம் தெரிவிக்கின்றேன் என்று சொன்னதற்கு அவர் எனக்கு நன்றி கூறினார். நாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும், நானும் அவரும் இறங்கினோம். பின்பு அவர் ஒரு முகவரி காட்டி அதன் விலாசம் கேட்டார். நான் செல்லும் வழியில் தான் அந்த விலாசமும் இருந்ததால், நான் அவரை அழைத்து கொண்டு சென்றேன். பாவம் அவரிடம் பொருள்கள் நிறைய இருந்ததால் தூக்க சிரமப்பட்டார். நானும் அவரிடம் இருந்த பொருள்களை சுமந்து கொண்டேன். பின்பு இருவரும் பேசி கொண்டே நடந்தோம். அவரிடம் எதற்காக சென்னை வந்திருகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என் வாழ்வில் ஓர் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அவர் வேலை தேடி வந்துள்ளதாக தெரிவித்தார். அவரது வயது 72. பெயர், சத்யநாராயணன், கேரளாவை சேர்ந்தவர். அவர் சொன்ன அறிவுரை, "உனக்குள் இருக்கும் திறமை ஒன்று தான் உனது மூல தனம். உலகம் உன்னை நம்புவதற்கு முன்னாள் முதலில் நீ உன்னை நம்பு. வெற்றிக்காக போராடுவதை விட தோழ்வியை தவிர்ப்பதற்காக போராடு ". நாங்கள் பிரியும் நேரம் வந்தது, அவரிடம் இருந்து விடை பெற்றேன். அவரோடு பயணம் செய்ததோ ஐந்தே நிமிடம் தான், ஆனால் இன்னும் அவர் சொன்ன வார்த்தையை கடந்த இரண்டு ஆண்டாக சுமக்கிறேன். அவர் எனக்கு வயதானவராக எனக்கு தெரியவில்லை. ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன், என் தலை எழுத்தில் அவரை சந்திக்க கட்டளையிட்டதற்கு. நன்றி இறைவா.
பிரபு பிரசன்னா - இரங்கல் செய்தி
பிரபு பிரசன்னா எனக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர் தான். ஆனால் எங்களுக்குள் இருந்த இணைப்பு நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தது மற்றும் தான். நான் இது வரை பிரபு பிரசன்னாவிடம் பேசியது கிடையாது. ஆனால் அவனது மரணம் ஏதோ மனதிற்குள் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. Feb 27 அன்று இரவு 11:30 மணி அளவில் காரப்பாக்கத்தில் இருந்து அவரது வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்த நேரத்தில் விபத்துக்கு உள்ளானார். தனக்கு ஏற்பட்ட விபத்தை உணர்ந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடி உள்ளார். அங்கிருந்து அவரை அரசு மருத்துவமனை, சென்ட்ரல் செல்ல அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவமனை போகும் வழியிலே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர் கூறி உள்ளனர். அவரது ஆத்மா சாந்தி அடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.
குறிப்பு: தயவு செய்து இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் பொழுது கவனமாக பயணம் செய்யுங்கள்.
Friday, February 27, 2009
மனிதன் பலவிதம்.......
என் பேருந்து பயணம் எனக்கு பல மனிதர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சிலர் சமுதாய அக்கறை இல்லாதவர்களையும் அடையாளம் காட்டி உள்ளது. நான் தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். பொதுவாக ஒருவர் மற்றவரை நன்றாக மதிப்பார்கள். ஆனால் சென்னையில் ஒருவன் மற்றவரை மதித்து பேசினால், அவர் தென் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருப்பார் என்று எனக்குள் சிந்திக்க தோன்றுது. இங்கே பேருந்தின் நடத்துனர் (conductor) பயணிகளிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சிலர் நடந்துள்ளதை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு நாள் தியாகராய நகர் செல்ல 5A பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழக்கம் போல கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டு பயணம் செய்தேன். பேருந்து சைதாபேட்டை அடுத்து சென்ற பொழுது என் அருகில் அமர்ந்து இருந்தவர் சற்றும் எதிர் பாராமல் கீழே விழுந்தார். நான் அவரை தூக்க முயற்சித்தேன். உதவிக்கு கூட யாரும் கை கொடுக்காமல் எல்லாம் அவர் அவர்கள் வேளைகளில் கவனமாக இருந்தார்கள். பேருந்தும் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. பேருந்து நடத்துனரிடம் இருந்து வந்த பதில் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் இருந்து வந்த வார்த்தை 'வயசான காலத்துல வீட்டுல இருக்க வேண்டியது தான. எதற்கு இங்க வந்து என் உயிரை வாங்குற. கொஞ்சன் தள்ளி படு. போ'. சிறிது நேரம் கழித்து இன்னொரு உதவி கரம் கிடைக்க அவரை கை தாங்களாக தூக்கி அவரை அமர வைத்தோம். அவரது முகத்தில் தண்ணீர் தெளிர்க்க, இயல்பு நிலைக்கு வந்தார். முதலுதவி கொடுப்பதற்கு நாங்கள் மருத்துவர் அல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர்கள். அவரிடம் பேசிய பின்பு தான் தெரிந்தது அவர் உடல் நலம் சரி இல்லாதவர். அவரிடம் சில்லறை இல்லாததினால் பேருந்து நடத்துனர், அவரிடம் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். அந்த மன அழுத்தத்தில் அவருக்கு மயக்கம் வந்து உள்ளது. மனிதர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள்.
நேற்று M21 பேருந்தில் வேளச்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வழியில் பயணம் செய்தேன். நான் இறங்க வேண்டிய இடம் அந்த பேருந்து நிற்காது என்றார் நடத்துனர். சரி என்று மேடவாக்கம் செல்ல பயணச்சீட்டு வாங்கினேன். நான் ஏறியது சொகுசு பேருந்து. ஆனால் எனது பயணமோ படிக்கட்டை தாண்ட முடியவில்லை. சற்று நேரம் கழித்து நடத்துனர் ஒரு பயணிக்கு புளிய மரம் பேருந்து நிறுத்தத்திற்கு பயண சீட்டு கொடுத்தார். சொகுசு பேருந்து புளிய மரம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என்று எனக்கு தெரியும். சரி இறங்கும் பொது நடத்துனரிடம் இதை கேட்ப்போம் என்று நினைத்தேன். புளிய மரம் பேருந்து நிறுத்தம் வந்தது. அப்பொழுது நடத்துனரே கீழே இறங்கி அந்த பயணியை இறக்கி விட்டார். அந்த பயணி ஒரு கால் இல்லாத ஊனமுற்றவர். நடத்துனரின் மனிதாபிமானத்திற்கு தலை வணங்குகிறேன். மனிதர்கள் உண்மையில் பலவிதம்..................
Monday, February 9, 2009
இலங்கை தமிழனின் அவலம்....
இலங்கை தமிழன் அங்கே சிங்கள ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருக்கிறான். இங்குள்ள அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகின்றனர். தேர்தல் வரும் நேரம் மட்டும் இலங்கை தமிழனுக்கு குறள் கொடுப்போம் என்று கோசமிடும் நயவஞ்சகர்கள் இப்பொழுது எங்கே போனார்கள். ஐக்கிய நாடுகள் சபை எதற்கு? மனித உரிமைகள் எதற்கு? தூங்கும் நேரம் கூட மரண பயத்துடன் இருக்கும் என் தமிழினம் என்று நிம்மதி அடையுமோ ?.
Subscribe to:
Posts (Atom)