Monday, May 30, 2011

சென்னை சூப்பர் கிங்ஸ் - அபார வெற்றி

இறுதி போட்டி ஆரம்பத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சாதகமாக இருந்தது. கடந்த ஆண்டு சொடுக்கு பாலாஜி இருந்தே கோப்பை கைப்பற்றிய சென்னை அணி இந்த முறை ஜெயித்ததில் எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. வழக்கம் போல அஸ்வின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. சுழல் பந்து வீச்சுக்கு எப்போதுமே சென்னை ஆடுகளம் ஒத்துழைக்கக் கூடியதாக இருக்கும். சென்னை அணி இந்த வருடம் ஃபீல்டிங்கில் சிறப்பானதாக இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ட்வெயின் பிராவோ ஃபீல்டிங் செய்யும் பொழுது ஒரு முழு ஈடுபாடு இருக்கும். அது போல தான் மும்பை இண்டியன்ஸின் கெய்ரோன் பொல்லார்ட். நம்ம சென்னை அணி பசங்கட்ட அது இல்லன்னு சொல்ல வரல. ஆனா ஃபோட்டொக்கு போஸ் குடுக்கனும்னு தோனுது. உதாரணத்துக்கு சொல்லனும்னா பத்ரினாத்துக்கு கைல வர பந்த கூட புடிச்சிட்டு ஒரு பல்டி அடிக்கனும்னு தோனுது. அது போல முரளி விஜய்க்கு கிழக்கு நோக்கி வர கேட்ச் மேற்கு நோக்கி கை வைச்சு பிடிச்சா ஆகாதுன்னு எந்த ஜோசியக்காரன் சொன்னான்(ர்) தெரியல. வடக்கு அல்ல தெற்கு நோக்கி கை வைச்சு பிடித்தால் தான் அனுகூலம்னு சொல்லிருக்கக்கூடும்னு நினைக்கிறேன். இந்த வருடம் ஒரு பெரிய அதிசயம் ஜகாடி ஃபீல்டிங்கில் கடந்த ஆண்டை விட மிக சிறப்பாக செய்தது. ஐ.பி.எல் ஐ விளம்பரப் படுத்த, ஒ இட்ஸ் பீன் எ காமெடி ஆஃப் எர்ரர்ஸ் நு தன்னை கிண்டலடிச்ச ஹர்ஸா போக்லேவை தன்னுடைய மோதிரக் கையால் கொட்டினாலும் தப்பில்லை. பேட்டிங்கில் ஹஸ்ஸி ஆரம்பத்தில் இருந்தே கலக்கினார். முரளி விஜய் கடைசி போட்டியில் கை கொடுத்தார். மற்றபடி பேட்டிங்கில், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேனின் பொறுப்பான ஆட்டத்தை பார்க்க முடிந்தது. ஆல்பி மார்க்கல்லின் அதிரடியான பேட்டிங் அறுமையாக இருந்தது. ரெய்னா, தோனி, பத்ரினாத், சகா, பிராவோ வெற்றிக்கு உதவினர். பொலிஞ்சர் பந்து வீச்சு நன்றாக இருந்தது. வெற்றிக் களிப்பில் பொலிஞ்சர் மற்றும் பிராவோவின் ஆட்டம் சூப்பர். அதிலும் பிராவோ குத்துப்பாட்டுக்கு போட்ட ஆட்டம் ஏதோ நம்ம ஊர் பையன் சாவுமேளத்துக்கு ஆட்டம் போட்ட மாதிரி இருந்தது. இன்னொரு விஷயம், தோனி மட்டும் கூல் கிடையாது, உண்மையில சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர், குருநாத் மெய்யப்பனும் கூல் தான்.

Tuesday, May 24, 2011

ஆட்சி மாற்றம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். எதிர்பார்த்த மாதிரி சில அதிகாரி மாற்றம் நடைபெற்றது. சட்டசபை திரும்பவும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறியது. ஓமந்தூரில் புதிதாக அமைந்துள்ள சட்டசபை இன்னும் ஐந்து ஆண்டுகள் பயனற்று கிடக்கப் போகிறது. எப்படியோ மக்கள் வரிப் பணம் 1300 கோடி வீணடிக்கப்பட்டது. எந்த ஆட்சி மாற்றம் வந்தாலும், முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தடுக்கப்படாமல், தொடர்ந்தால் நல்லது. இலவசங்களை அல்லிக் கொடுத்து, அரச கஜானாவை காலி செய்வதை விட, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இலவசங்களாக கொடுப்பவற்றை மக்களே வாங்கும் நிலை வர வேண்டும். சமச்சீர் கல்வியை எடுத்த எடுப்பிலே வேண்டாம் என்று சொல்லும் இந்த அரசாங்கம், சற்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். விரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகர், சுருக்கப்பட்டு கே.கே நகராக உருப்பெற்றது. மறைக்கப்பட்ட ஜே.ஜே நகர் திரும்பியது. ஆமாம், முகப்பேர் மேற்கு, ஜே.ஜே நகராகியது. எனக்கு தனிப்பட்ட முறையில் கடந்த ஆட்சியில் மிகவும் பாதித்த விஷயம் என்றால், கலைஞர், அண்ணா நினைவகத்தில் நிறைவேற்றிய ஒரு கபட நாடகம். அடுத்தவன் சாவில் குளிர் காய நினைத்தது மிக பெரிய பாவம். தன் பிள்ளை, பேரனுக்கு ஆட்சியில் துண்டு போட, டெல்லி விரைந்தோடும் பொழுது, லட்சக்கனக்கில் உயிரழந்த தமிழனுக்கு ஒரு அதிகாரக் குரல் கொடுக்காதது ஏன்? கேட்டால், கடிதம், தந்தி அனுப்பியதாக சொல்வர். ஏன் அவருடைய பிள்ளை, பேரனுக்கு அமைச்சரவையில் இடம் கேட்க தந்தி அனுப்பியிருக்கலாமே ?. ஒரு வேளை, தம் கடிதம் சேரும் முன், தகவல் தொழில்நுட்பம் வேரு ஒருவருக்கு சென்று விடுமோ என்ற பயமாக இருக்கும். அடுத்தபடியாக ஸ்பெக்ட்ரம்(Spectrum) ஊழல், ஒரு முட்டாள்த்தனமான செயலால், நாட்டின் பொருளாதரத்திற்க்கு ஒரு லட்சத்திற்கு எழுபத்தி ஆறாயிறம் கோடி இழப்பு. இதற்கு முன் லாலு பிரசாத் யாதவ் தான், பெரிய ஊழல்வாதி என்ற எண்ணம் தவிடு பொடியானது. முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற வண்ணம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கினாராம். எங்கு வந்தவற்க்கு, கலைஞர் டிவி அலுவலகத்திற்க்கு வந்தவருக்கா என்று ராஜா தான் தெளிவு படுத்த வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யனும்னு யாரும் அரியனை ஏறவில்லை என்பது எனக்கு தெரியும். மொத்தத்துக்கும் காலி பன்னிட்டா அடுத்து வரவிருக்கும் அமைச்சர் அவன் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவான். தேவைக்கு மட்டும் அரச கஜானாவில் எடுத்துக்கோங்க.