Wednesday, September 1, 2010

தபால்கார தம்பதிகள்

கடந்த வாரம், நான் வசிக்கும் தெருவில் 40 வயது மதிக்கதக்க ஒரு பெண் எதையோ தேடி அலைந்து கொண்டிருந்தார். பிள்ளையார் கோவிலை சுற்றுவதை போல எங்கள் தெருவையே சுற்றி சுற்றி வந்து நடந்து கொண்டிருந்தார். என் அப்பா அந்த பெண்ணிடம், எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்கள். அதற்க்கு அந்த பெண் தன்னை அந்த பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தபால்களை கொடுப்பவர்(Post [wo]man) என அறிமுகபடுத்தி கொண்டார். ஒரு விலாசத்தை கேட்டார் அந்த பெண்மணி, என் அப்பா அந்த முகவரி இருக்கும் வீட்டை அடையாளம் காட்டினார். அந்த பெண்மணியிடம், ஏன் நடந்தே வர்றீங்க, ஒரு டூ-வீலர்ல வர்ற வேண்டியது தானே என்று கேட்டுள்ளார். அந்த பெண்மணிக்கு சைக்கிளே ஓட்ட தெரியாதாம். அப்புறம் எப்படி எல்லா தபால்களையும் கொடுக்க முடியும் என்று என் அப்பா கேட்டுள்ளார். அவரோ, முடிந்தவரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் நடந்து சென்று தபால்களை கொடுப்பாராம். மற்றவை எல்லாம், திரும்ப தபால் நிலையத்தில் வைத்து விடுவாராம். அவருடைய கணவரும், பக்கத்துக்கு ஊரில் போஸ்ட்மேன் வேலை செய்கிறாராம். அவருடைய வேலையை சீக்கிரம், முடித்து கொண்டு இங்க வந்து அவர் மனைவியின் வேலையை செய்வாராம். எங்கள் ஏரியாவில் தபால்க்காரர் , ஞாயிறு கிழமைகளிலும் வேலை செய்கிறார். ஒரு நாள், காலை 6 மணி அளவில், வெளியில் சென்று கொண்டிருக்கையில், கையில் தபால்களுடன், விலாசத்தை தேடி அந்த கணவர் அலைந்து கொண்டிருந்தார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிறந்த தம்பதிகள். எப்படியோ எங்களுக்கு வர வேண்டிய கடிதம் வந்து சேர்ந்தால் கூடுதல் நலம் :)

Friday, August 13, 2010

வேலை தேடிய நாட்கள்

சென்னை சென்றவுடன் வேலை கிடைத்து விடும் என்ற பெரும் நம்பிக்கையில் இங்கே வந்து இறங்கி ஏமாந்து போனோம். நான், கேசவன் மற்றும் விநாயகமூர்த்தி மூவரும் மதுரையில் இருந்து சென்னை வந்தோம். முதல் முதலாக தாம்பரத்தை அடுத்து உள்ள பழைய பெருங்களதூரில் தங்கி இருந்தோம். அடுத்ததாக விஜயநகரில் வெங்கடேஸ்வர நகரில் சிறிது காலம் தங்கி இருந்தோம். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. அந்த சமயம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தவர்கள் என் அப்பா மற்றும் அம்மா. தொடர்ந்து வேலை தேடி கொண்டிருக்கையில் நாட்களும் நகர்ந்தன. அங்கிருந்து பின்பு வேளச்சேரி TNHB காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். நான், கேசவன், விநாயகமூர்த்தி, மாரிசாமி மற்றும் பாண்டி தங்கினோம். ஒரு சமயம் வீட்டில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை 13 ஐ தொட்டது. சில நேரம் ஒருவன் கால் மற்றவனுக்கு தலையனையாகவும் இருக்கும். தங்கி இருந்த அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் எங்கள் சம்பளத்தை எதிர்நோக்கி எங்கள் குடும்பம் காத்திருந்தன. வேலை இல்லை என்கிற கவலையை தவிர எல்லா நேரமும் எங்களுக்குள் சந்தோசம் புரையோடி கொண்டிருக்கும். எந்த நேரமும் கிண்டலும் கேலியும் இருக்கும். அடுத்ததாக எங்கள் வாடகை வீட்டிற்கு வந்தவன் கோபால்சாமி. அடுத்ததாக வந்தவன் நோயல். அடுத்து ரிச்சர்ட், ஹுசைன் (சதீஷ்), ரவீந்திரன். இதுல கொஞ்சம் நேரம் படிப்போம், நிறைய நேரம் பேசி சந்தோசமா இருப்போம். எங்களுக்கு அந்த வீடு ஒரு உள்விளையாட்டு அரங்கம் கூட. உள்ளேயே கிரிக்கெட் விளையாடுவோம். நல்லா அந்த ஹால்ல படுக்கனும்ன மூன்று நபர்கள் படுக்கலாம். ஆனா அந்த ஹால்ல கூட 3 பேரு பீல்டிங் நிப்போம். ராத்திரி வரை சீட்டு விளையாட்டு. சமைக்க காஸ் சிலிண்டர் வீட்டு சொந்தக்காரரே குடுத்ததால, மூணு வேலை சமையல் நடக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைல சமைக்கணும். இதுல பாண்டி சமைக்கணும்னு சொல்லிச்சுன்ன கடைக்கு போயி ரவை வாங்கி வந்து கிண்டி வைப்பான் உப்பு போடாம....காலை வேலைல உப்புமாவ உப்பு இல்லாம சாப்பிட்ட எப்படி இருக்கும். அவனிடம் கேட்டா தெரியாம செஞ்ச தப்புன்னு சொல்லுவான். சில நேரம் பஞ்சாயத்து நடக்கும். செலவு கணக்கு எல்லாம் விநாயகமூர்த்தி பாத்துக்குவான். நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தும் குழம்ப கடைசி வரைக்கும் கட்டிய வச்சு சாபிடதே இல்லை. சாதத்துல நாங்க வச்ச குழம்ப ஊத்தி சாப்பிட்டா ரெண்டும் ஒட்டவே ஒட்டாது. அப்படி இருந்தாலும், ஒரு பெரிய பாத்திரத்தில செய்ற சாப்பாடு கடைசில சாபிடுவனோட நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இருக்கிற சாப்பட்ட நிரந்து சாப்பிடுவோம். என்ன குழம்பு வச்சாலும் கடைசில மல்லி இழை போட்டு முடிச்சு வைப்போம். ஊறுகாய் தான் தினசரி தொட்டுக்கிரதுக்கு இருக்கும். இது பரவாயில்லை காலைல சம்பா ரவை உப்புமா சாப்பிட்டு நாக்கு செத்து போன காலம் மறக்கவே முடியாது. சென்னைல வேலை கிடைச்சும் உப்புமாக்கு பயந்து ME படிக்க போனவன் எல்லாம் உண்டு. நாயர் கடைல டீ, சலூன் கடைல டிவி, அரட்டை அடிக்க மளிகை கடை சரவணன். சாயுங்காலம் வெளில கிரிக்கெட். வாய் பேசறதுக்கு முன்னாடி வீட்டு சொந்தக்காரரோட பையன எல்லாம் அடிச்சது நினைவுக்கு இருக்குது. யாருக்காவது உடம்பு சரியில்லைனா, மத்தவங்களுக்கு எல்லாம் மஜா தான். ஒரு தடவை மாரிசாமிக்கு தூங்கி கிட்டுரிக்கிற சமையத்துல நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதுக்கு, தூங்கி கிட்டிருக்க எல்லாரும் எந்திரிச்சு சிரிச்சத மறக்கவே முடியாது. யாரவது interview க்கு போனா போதும், அவன் திரும்ப வரும் பொழுது அவன சுத்தி ஆடுரதுக்குனு ஒரு கூட்டம் இருக்கும். ஒவ்வொருத்தரோட போர்வையை முகர்ந்து பார்த்தா அந்த மயக்கதுலையே தூங்கிறலாம். நாங்க பௌடர மூஞ்சில அடிச்சத விட அடுத்தவன் அக்குள்ள போட்டது தான் அதிகமா இருக்கும். எப்பவாவது எங்க எதிர் வீட்டு அக்கா அவங்க வீட்டில செஞ்ச சாப்பாட குடுப்பாங்க. அதில எல்லாரும் போட்டி போட்டு பறிச்சு சாப்பிடுவோம், அந்த கூட்டதில எனக்கு கொஞ்சம்னு கை நீட்டிற ஒரே ஜீவராசி கோபால்சாமி மட்டுமே. இன்னும் நிறையா எழுதிட்டே போகலாம். வேலை தேடிய அந்த நாட்கள்ல எல்லோரும் நல்லா மனம் விட்டு பேசுவோம். இப்ப எல்லாம் பேசுறதே குறைஞ்சு போச்சு. ஆனால் எல்லாரோட மனசுலயும் நினைவுகள் இருக்கும்னு நினைக்கிறேன்.

Tuesday, June 22, 2010

வயோதிக பெற்றோரை குழந்தையாக நினையுங்கள்....

சமீபத்தில் என் அலுவலக ப்ளோகில் படித்த ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அதை அப்படியே இங்கே எழுதுகிறேன். ஒரு வயதான தந்தை தன மகன் அருகில் அமர்ந்து இருந்தார். அங்கே சற்று தூரத்தில் ஒரு காக்கை வந்து ஒரு மரம் அருகில் அமர்ந்து இருந்தது. அதை நோக்கி தன் கை விரலை உயர்த்தி தன் மகனிடம் அது என்னது என்று வினவினார். மகன் தன் தந்தையிடம் அது காக்கா என்று சொல்லி விட்டு தன் கவனத்தை தொலைக்காட்சியில் செலுத்தினார். மீண்டும் ஒரு முறை அந்த தந்தை அது என்னது என்று வினவினார். மகன் மீண்டும் அது காக்கா என்று சொல்லிவிட்டு தன் கவனத்தை தொலைக்காட்சியில் முன்பை விட சற்று வேகமாகவே செலுத்தினான். மற்றும் ஒருமுறை அந்த தந்தை தன் மகனிடம் அது என்ன என்று காக்காவை நோக்கி கை உயர்த்தி கேட்டவுடன் மகன் கடும் கோபத்துடன் தன் தந்தையிடம் எத்துனை தடவை தான் அது காக்கா என்று சொல்ல.....உனக்கு புரியலையா அப்பா என்று கத்தினான். அந்த தந்தை தன் அறைக்கு சென்று ஒரு பழைய குறிப்பேடு(Dairy) எடுத்து வந்தார். சிறு வயது முதல் குறிப்பு எழுதும் பழக்கம் உடைய அந்த தந்தை ஒரு பக்கத்தை எடுத்து தன் மகனிடம் வாசிக்க சொன்னாராம். அந்த பக்கத்தின் குறிப்பு தன் மகனின் சிறு வயது செயல் பற்றிய குறிப்பு. அங்கே இவ்வாறாக எழுதியிருந்தார் அந்த தந்தை 'என் மகன் இன்று என் அருகில் அமர்ந்து கொண்டு என்னிடம் எங்கள் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த காக்காவை நோக்கி அது என்னது என்று என்னிடம் 23 தடவை கேட்டான். நான் அவனிடம் அது பெயர் காக்கா. அது பறக்க கூடிய ஒரு பறவை என்று விளக்கினேன். என் மகன் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நான் அவனை கட்டி பிடித்து கொண்டு கோபம் கொள்ளாமல் அது காக்கா என்று கூறினேன். மிகவும் சந்தோசமாக இருந்தது என் மகனின் செல்ல குரலில் அவன் அது என்னது என்று ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்...' . ஆனால் இன்று அந்த மகன் தன் தந்தை மூன்றாவது முறை கேட்கும் பொழுதே பொறுமை இழந்து கோபத்துடன் பதில் கூறுகிறான். வயதாகும் பொழுது ஒரு முதியவர் குழந்தை குணம் கொண்டவராக மாறுகிறார்கள். ஆகவே சற்று பொறுமையாக அவர்களிடம் கையாள வேண்டும்.

குறிப்பு: மேற்கண்ட விஷத்தை நான் ஆங்கிலத்தில் படித்ததை என்னால் முடிந்த வரை தமிழில் மாற்றியுள்ளேன்.

Thursday, May 6, 2010

தாய் தந்த சீதனம்!

படித்ததில் பிடித்தது (என் அலுவலக ப்ளாகில் சுனில் என்பவர் எழுதியிருந்தார்)

சில நேரங்களில் எங்கேயோ நாம் கேட்ட கதைகள், சம்பவங்கள், விஷயங்களைப் படிக்கும்போது 'ச்சே... இதை முன்கூட்டியே படிச்சிருந்தா, என் விஷயத்துல கொஞ்சம் நிதானமா நடந்திருப்பேனே' என்று நினைக்கத் தோன்றும். அப்படி நம்மை நாமே செதுக்கும் உளியாக சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இது.

ஜூலி-சாலமன் இருவரின் திருமணத்தன்று, புதிதாகத் தொடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீட்டிய ஜூலியின் அம்மா, ''நீ சந்தோஷமா இருக்கிறப்பல்லாம் உன்னால எவ்வளவு பணம் போட முடியுமோ போட்டு வை. அப்படியே என்ன காரணத்துக்காக பணம் போட்டியோ... அதை, பாஸ்புக்குல இருக்கற ரிமார்க்ஸ் ஏரியாவுல எழுதி வை" என்று சொன்னார். மகளின் திருமண சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 2,000 ரூபாயையும் அதில் டெபாஸிட் செய்திருந்தார்.

''நல்ல ஐடியாவா இருக்கே... நாம ரெண்டு பேருமே இந்த அக்கவுன்ட்டில் பணம் போடலாம்" என்று தானும் உற்சாகமாகிவிட்டார் சாலமன்.

'ஜனவரி 800 ரூபாய் - ஜூலியின் பிறந்த நாள். பிப்ரவரி 1,000 ரூபாய் - சாலமனுக்கு புரமோஷன். மார்ச் 400 ரூபாய் - கொடைக்கானல் ஜாலி ட்ரிப் போன சந்தோஷம். ஏப்ரல் 1,000 ரூபாய் - சாலமனுக்கு பிறந்த நாள். மே 3,000 ரூபாய் - நான் அப்பாவாகப் போற இரட்டிப்பு சந்தோஷம்'

- இப்படி நான்கு ஆண்டுகள் சந்தோஷமாகக் கரைந்து கொண்டிருந்த சூழலில், திடீர் சூறாவளி! காரணம் இல்லாமலே அடிக்கடி சண்டைகள் வெடிக்க, ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு போன் செய்த ஜூலி, ''இனியும் இவரோட குடும்பம் நடத்த முடியாது. இவரைப் போய் எப்படிம்மா எனக்குக் கட்டி வெச்சீங்க" என்று புலம்பினாள்.


ஆயிரம் சமாதானங்களும் எடுபடாத நிலையில்... ''ஓ.கே... நீ விரும்பின மாதிரி உனக்கு டைவர்ஸ் வாங்கித் தந்துடறேன். அதுக்கு முன்ன நீ ஒண்ணு செய்யணும். உனக்கு கல்யாணத்தன்னிக்கு நான் கொடுத்த பாஸ் புக்குல போட்ட பணத்தை எல்லாம் முதல்ல பேங்க்ல இருந்து எடுத்துடு. உன் கல்யாணச் சுவடா எதுவுமே இருக்கக் கூடாது" என்றாள் அம்மா.

வங்கி க்யூவில் நின்றபடியே மெதுவாக பாஸ் புக்கை புரட்டிய ஜூலி, ஒவ்வொரு டெபாஸிட் பற்றியும் எழுதப்பட்டிருந்த அந்த சந்தோஷ நினைவுகளைப் படித்துக் கொண்டே போக, இமை மீறியது கண்ணீர்! 'எனக்கு இத்தனை சந்தோஷங்களைத் தந்திருக்கிறாரா சாலமன்!' என்று நினைத்தவள், சட்டென்று வங்கியைவிட்டு கிளம்பி ஓடினாள். ''இந்த பாஸ்புக்ல இருக்கிற பணத்தை செலவழிச்ச பிறகு நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்" என்று சாலமனிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள்.


மறுநாள்... கையில் பாஸ்புக்குடன் வாசலில் நின்றான் சாலமன். ஓடி வந்து அதை வாங்கி பார்த்தவள், அப்படியே அவனை இறுகக் கட்டிக் கொண் டாள்.

பாஸ்புக்கில் இருந்தது - 'டிசம்பர் மாதம் 5,000 ரூபாய்- மனைவியுடனான மோதல் முற்றுப்புள்ளிக்கு வந்த நாள்.

Thursday, April 15, 2010

படித்ததில் பிடித்தது...

நான் சமீப காலமாக இன்டர்நெட்டில் தேடுவது தமிழ் கவிதை தொகுப்புகளை தான். ஏன் இந்த தமிழ் மோகம் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு கருத்தை ஆங்கிலத்தில் படிப்பதை விட தாய்மொழியில் படிக்கும் பொழுது அதன் சுவையை முழுமையாக உணர முடிகிறது. அது போல எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படைப்புகள் என்றால் சொல்வேந்தர் சுகிசிவம் படைப்புகள் என்பேன். ஒரு கருத்தை நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர். அவரது வெற்றி நிச்சயம் கதை தொகுப்பை தற்பொழுது படித்து கொண்டிருக்கிறேன். அவரின் சவாலே சமாளி ஒலிநாடாவை அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். ஒரு ஆண் பெண் உறவு முறையை கூட ஆபாசம் இல்லாமல் சொல்லக்கூடியவர். நகைச்சுவையுடன், அறிவியலையும் விளக்குவதில் வல்லவர். சுகி சிவத்தின் பெருமையை சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அதை போல் ஒரு சில நாட்கள் முன்பு ஒரு கவிதையை படிக்கும் பொழுது சிரிப்பலை மனதில் பாய்வது உணர முடிந்தது. அதன் சுருக்கத்தை சொல்கிறேன்.....கவிதை வரிகளாய் அல்ல ..

சாந்தமே உருவான சாந்தி மீது மாரியம்மாள் வந்தாள்.... பதினெட்டு ஊர் கூடிய இடத்தில சாந்தி அம்மன் அருள் கொண்டு ஆவேசமாய் இருந்தாள் ... என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்கிறாள்......நான் எப்படி சொல்வேன் ..... ஆவேசமாய் இருந்தாலும்.....அழகை இருக்கும் அவள்(சாந்தி) தான் வேண்டும் என்று....

தமிழ் மொழி அழகாய் தோன்றுகிறது.......இருப்பினும் தமிழன் எங்கும் வெற்றி கோடி நாட்டிட உலக மொழியை கற்ப்போம். இங்குள்ள அரசியல்வாதிகள் தனது ஓட்டு எண்ணிக்கைக்காக பிற மொழிக்கு சிவப்பு கோடி காட்டுவதை நிறுத்த வேண்டும்.

Friday, April 2, 2010

ஹர்ஷினி - 5 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

இன்று செய்தி தாளை பார்த்தவுடன் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஹர்ஷினி என்ற 10 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள். வகுப்பிற்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி தன தாயாரிடம் கவலை பட்டு அழுதுள்ளார். பின் தன மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஏன் இந்த உணர்வு அந்த சிறுமிக்கு வர வேண்டும். இந்த வயதில் தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு ஏன் அவள் மனம் செல்ல வேண்டும்? இப்பொழுதுள்ள சிறார்கள் தங்கள் மனதை பக்குவபடுத்த பழக்கி விட வேண்டும். அதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான் செய்ய முடியும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைகாட்சி பெட்டிக்குள் முடங்கி விடுகிறார்கள். அங்கே திணிக்க படும் காட்சிகள் தான் இந்த மாதிரி தற்கொலைக்கு வழிவகுக்கிறது. நான் எப்பொழுதும் விளையாட்டு சேனல்களை தான் விரும்பி பார்ப்பேன். அப்படி பார்க்கும் பொழுது மல்யுத்தமும் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் என் அக்காவின் குழந்தை கட்டிலின் மேலிருந்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தான். யாரோ ஒருவரை தாக்கும் முனைப்புடன் மாறி மாறி விழுந்ததை கண்டதும் எனக்கு அந்த மல்யுத்தத்தை பார்த்து தான் இப்படி செய்கிறானோ என்று சந்தேங்கம் வந்தது. அன்றிலிருந்து அவன் இருக்கும் நேரத்தில் மல்யுத்தத்தை பார்ப்பதை தவிர்த்தேன். குழந்தைகளுக்கு எதை பார்க்கிறோமோ அதை செயலாக மாற்ற தான் நினைப்பார்கள். கடந்த வாரம் ரயிலில் பயணம் செய்தேன். பக்கத்தில் ஒரு கணவன், மனைவி ஒரு சிறு குழந்தை பயணம் செய்தது. அந்த நபர் சற்று களைப்பாற ரயில் கதவருகே போய் நின்றுள்ளார். சற்று நேரம் கழித்து அந்த கணவன் மனைவி தூங்கிய பின் அந்த குழந்தை ரயில் கதவருகே சென்று நிற்பதை பார்த்து அந்த வழியாக சென்ற ஒரு நபர் அந்த குழந்தையை பத்திரமாக கூட்டி வந்து அந்த பெற்றோரை வசை பாடியுள்ளார். ஆகவே, சினிமாவில் தற்கொலை காட்சிகளை அப்பட்டமாக காண்பிப்பதை தவிர்க்கலாமே. இதே வாரத்தில் மற்றொரு தற்கொலை முயற்சி நாளிதழில் வந்ததை படித்தேன். ஆம் இடைதேர்தலில் அதிமுக தோழ்வி அடைந்த விரக்தியில் ஒரு தொண்டர் ஒருவர் தீக்குளித்து கொண்டாராம். தன குடும்பத்தை விட தான் சேர்ந்த கட்சி முக்கியமானதா ?. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அந்த நபர் செய்த விஷயம் ஒரு முட்டாள்தனம். தூண்டுதல் என்று யாரும் இல்லை. ஆனால் ஏனோ அதே செயலை செய்த இந்த சிறுமியை நினைத்தால் பழியை யார் மீது சொல்லலாம் என்று சொல்லும் பொது......சினிமா என்று தான் எனக்கு தோன்றுகிறது. அந்த சிறுமியின் ஆன்மா ஷாந்தி அடைய வேண்டுகிறேன். இதை எழுதும் பொழுது அந்த பெற்றோரின் நிலையை கண்டால் கஷ்டமாக உள்ளது. எத்தனை கனவுகளுடன் இருந்திருப்பார், இன்றோ கருகிய நிலையில் அந்த குழந்தையை பார்க்கும் பொழுது எப்படி இருக்கும் என்ற ஒரு உணர்வை நினைக்கவே முடியவில்லை. இயல்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் இந்த மாதிரி தற்கொலை காட்சிகளுக்கு மட்டும் தங்கள் கொள்கைகளை விட்டு கொடுக்க முன் வரவேண்டும்.

Wednesday, March 31, 2010

அய்யனார் சாமி - வார்டனா ?

கடந்த இரு நாட்களாக கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். 28 ஆம் நாள் ஞாயிற்று கிழமை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றோம். அடுத்த நாள் காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி சென்றடைந்தோம். பின் அங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்தில் பயணம் செய்தோம். பங்குனி உத்திரம் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருசெந்தூர் வரை கால் கடுக்க நின்றே பயணிக்க வேண்டி இருந்தது. பின் அங்கிருந்து எங்கள் குல தெய்வம் செல்லபிள்ளை அய்யனார் கோவில் அமைந்துள்ள பரமன்குறிச்சி சென்றோம். இறை தரிசனம் பெற்று அங்கே வாழை மரம் நிழலில் தூங்கி எழுந்தேன். இறை வேண்டுதலுக்காக மொட்டை போட்டுக்கொண்டேன். நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டு இறைவனை குடும்பத்துடன் வேண்டி கொண்டேன். அடுத்த நாள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி முருகப்பெருமானை தரிசித்து வந்தோம். இரவு முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்காக அங்கிருந்து தூத்துக்குடி வந்தடைந்தோம். எனக்கான இருக்கை என் s9-38. என் முன்னாடி ஒரு நபர் அமர்ந்திருந்தார். அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். நானாக சென்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் பெயர் சின்னத்தம்பி. துணி தைத்து கொண்டு சென்னை மைலாப்பூரில் ஒரு கடை வைத்திருப்பதாக சொன்னார். எங்கே பொய் வருகிறார் என்று கேட்டதற்கு குல தெய்வம் கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன் என்றார். நான் அவரிடம் உங்கள் குல தெய்வம் என்ன என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் சற்று விநோதமாக இருந்தது. ஆம். அவர் குல தெய்வம் அய்யனார் என்று சொன்னார். கையில் அரிவாளுடன் காணப்படும் அய்யனார் என்றார் ..... நான் சரி என்று சொல்லும் முன்பே அவர் சொன்னார் அய்யனார் ஒரு வார்டன் சார் என்றார். வார்டன் என்றால் கல்லூரி விடுதியில் இருப்பவரை ஒப்பிட்டு சொல்கிறீர்களா என்றேன். அவர் சொன்ன பதில் ஆம் அய்யனார் உலகையே காக்கும் வார்டன் என்றார். சரி அதற்க்கு மேல் விளக்கம் கேட்டால் நான் நாத்திகன் என்ற முத்திரை குத்தப்படும் என்று நினைத்து என் கேள்விகளை எனக்குள்ளே வைத்து கொண்டேன். சரி அவர் சென்னையில் வசிக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு என்று கேட்டேன். அவரோ சென்னையில் சொந்த வீட்டில் வசிப்பதாக சொன்னார். சற்று ஆர்வ மிகுதியுடன். அவரிடம் எத்தனை வருடங்களுக்கு முன்னாள் எத்தனை லட்சங்களுக்கு வீடு வாங்கினீர்கள் என்றேன். அவர் சொன்னார் வருடம் 350 ரூபாய் மட்டும் தான் என்றார். எனக்கு ஒரு சந்தேகம் எழ ஆரம்பித்தது. ஒரு வேலை அந்த நபர் போதையில் இருக்கிறாரா என்று எனக்கு தோன்றியது. ஆனால் அப்படி தெரியவில்லை. பின் அவரே சொன்னார் அவருக்கு குடிசை மாற்று வாரியத்தால் அந்த வீடு இலவசமாக குடுக்க பட்டதாம். வருடம் ஒரு முறை மண் வரி என்றே பெயரில் 350 ரூபாய் கட்டினால் போதுமாம். எனக்கு தூக்கம் வந்ததால் அவரிடம் கை குலுக்கி விடை பெற்றுகொண்டேன். எனக்குள் இரண்டு கேள்விகள் மட்டும் நிலைத்து கொண்டது.... அய்யனார் வார்டனா ? இன்னொன்று இலவச வீடு சென்னையிலா ... ஒரு வேலை அவருக்கு அரசாங்கம் குடுத்த ஹமாம் கிரக பிரவேஷம் பரிசு திட்டத்தின் வெற்றியாளாரோ ? என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டேன். காலை கண் விழித்து பார்த்ததும் தாம்பரம் வந்தடைந்ததும் ரயில் பயணம் இனிதே முடிவடைந்தது. கடந்த இரு நாட்கள் நன்றாக இருந்தது.

Tuesday, March 23, 2010

என் இறை வேண்டுதலுக்கான காரணம்....

கடந்த சில நாட்களாக என்னிடம் பல நபர்கள் கேட்ட கேள்வி எதாவது காதல் தோழ்வியில் கஷ்டப்படுகிறேனா என்று? அவர்கள் கேட்டதற்கான காரணம் என்னுடைய தோற்றம். சவரம் செய்யப்படாத தாடி, அடர்ந்த முடி. இவை போதாதா நம் தமிழ் சினிமா கற்று கொடுத்த யூகங்கள். கடந்த மூன்று மாதமாக நான் முடி வெட்டவில்லை. அதை போல கடந்த ஒரு மாதமாக சவரம் செய்யப்படாத முகத்துடன் காணப்படுகிறேன். தாடி சற்று அதிகமாகவே என் முகத்தில் ஆக்கிரமித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு இறை வேண்டுதலுக்காகவே இந்த தோற்றம். வரும் திங்கள் கிழமை என் குலதெய்வம் கோவிலில் மொட்டை போடப்போகிறேன். வெயிலுக்கு சற்று இதமாகவே இருக்கும். சென்னையில் வெயில் வாட்டி கொண்டிருக்கிறது. இந்த இறை வேண்டுதலுக்கான காரணத்தை எழுத நினைக்கிறேன். கடந்த வருடம், ஜூலை மூன்றாம் தேதி நான் தவறி விழுந்ததில் என் முன் பல்லில் பலத்த காயம் ஏற்பட்டது. என் குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்ணீரையும் பார்த்த நாள். அவர்கள் மேலும் கஷ்ட படகூடாது என்பதற்காக என்னில் இருந்த வழியை யாரிடமும் காட்டவில்லை. என் அக்கா அழுததை பார்த்து எங்கள் வீட்டு செல்ல பிள்ளை லோக்ரஞ்சன் அழுததை நினைத்தால் இப்பொழுது கூட மனம் கஷ்டப்படும். என் அக்கா என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். முதலில் சென்ற பல் மருத்துவமனையில் பல்லை எடுத்தாக வேண்டும் என்று சொன்னதும் என் அக்கா தேம்பி தேம்பி அழுதாள். சரி வேறு வழி இல்லாமல் நான் சம்மதம் தெரிவித்தேன். சரி நிலைமையை என் அத்தானிடம் சொன்னதும் அவர்கள் செங்கல்பட்டிலிருந்து தியாகராய நகரில் உள்ள மருத்துவமனைக்கு கிளம்பி வந்தார்கள். என் அத்தான் வரும் வரை காத்திருப்போம் என்று நானும் அக்காவும் முடிவு செய்தோம். முதலுதவியாக ஒரு ஊசி மட்டும் போட்டனர். மீனாக்ஷி பவனில் மதிய உணவை நானும் அக்காவும் சாபிட்டோம். உண்மையில் என்னால் சாப்பிட கூட முடியாத அளவு வலி. இருந்தாலும் என் அக்கா முன்னாடி அதை காட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்தேன். நான் எப்படி கஷ்டபடுகிறேன் என்று அவளால் உணரமுடிந்தது. என் அத்தானும் வந்து சேர்ந்தார்கள். மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்பு என் அத்தான் பல்லை அகற்றாமல் மருத்துவம் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் முடியாது என்று மறுத்துவிட்டார். சரி என் அத்தான் இன்னொரு மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு முயற்சி செய்யலாம் என்று சொன்னவுடன், என்னை அழைத்து கொண்டு சென்று அந்த மருத்துவரை பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த மருத்துவர் ஆந்திர எல்லையில் இருக்க கூடிய சித்தூரில் இருக்கிறார். சென்னையில் இருந்து பயணம் செய்தால் குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஆகும். இடையில் அப்போல்லோ பல் மருத்துவமனை விளம்பர பலகையை பார்த்தோம். நேரம் ஆக ஆக என் பல் கீழே விழுவது போலவே எனக்கு தோன்றியது. என் உதடுகள் எல்லாம் வீங்கி வறண்டு இருந்தது. சரி அப்போல்லோ பல் மருத்துவமனையில் தலைமை மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என்று முடிவு செய்து அங்கே சென்றோம். தலைமை பல் மருத்துவர் பெயர் தரிதா ராம். அவர் வேறு ஒருவருக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்ததால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவர் பெயர் நமீதா. அவரும் எக்ஸ்ரேயை பார்த்து விட்டு பல்லை அகற்றுவது தான் ஒரே வழி என்றார். என் அத்தான் தலைமை மருத்துவரையும் ஒரு முறை பரிசோதித்து சொல்ல அந்த மருத்துவரிடம் கேட்டதும், தலைமை மருத்துவர் வந்து பரிசோதித்து முயற்சி செய்யலாம் என்றார். பல்லில் பின்னல் உள்ள சதை வலிமையுடன் இருப்பதாக சொன்னார். உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று கட்ட சிகிச்சைக்கு பின்பு, எனது முன் பல் சரி செய்யப்பட்டது. இப்பொழுது மருத்துவ ஆலோசனைப்படி முன் பல்லில் ரொம்பவும் கடினமான அழுத்தம் குடுக்காமல் பழகிக்கொண்டேன். நான் அந்த தலைமை மருத்துவர் தரிதா ராமிற்கு என்று கடமை பட்டவன். அந்த மருத்துவரிடம் உள்ள நல்ல குணம், எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்று பேசுவார். அந்த தருணம் மட்டும் என் அத்தான் மருத்துவமனைக்கு வராமல் இருந்திருந்தால், என் முன் பல் அகத்ற்ற பட்டு செயற்கை பல் பொறுத்த பட்டிருக்கும். எல்லாம் நல்ல படியாக முடிந்ததற்காக தான் இந்த இறை வேண்டுதல்.

Saturday, March 20, 2010

தமிழக பட்ஜெட் - சிறு கண்ணோட்டம்

தமிழக பட்ஜெட் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் வரி இல்லாத பட்ஜெட். சிறு மீனை போட்டிருக்கிறார்கள் திமிங்கலத்தை தன வலையில் வீழ்த்த. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத ஒரு அம்சம் இன்னும் 44 லட்சம் இலவச தொலைக்காட்சிகள் விநியோகிக்க பட உள்ளனவாம். எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படுகிறது என்று புரியவில்லை. வசதி இல்லாதோருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் ஐந்தாடுகளில் கணக்கெடுத்து பார்த்தால் (4400000*5) சுமார் இரண்டு கோடிகளுக்கு மேல் இந்த இலவச தொலைகாட்சி அளிக்கபட்டிருக்கிறதா ? அப்படி எடுத்துக்கொண்டால் சுமார் 8 கோடி மக்கள் தொகையில், இரண்டு கோடி நபர் வசத்தில் இல்லாதவரா ? நான்கில் ஒருவன் வசதி இல்லாதவன் என்றால் அவன் வாழ்க்கை தரத்தை இந்த அரசாங்கம் எப்படி முன்னேற்றியிருக்கிறது. மக்களை சோம்பேறிகளாக ஆக்கியுள்ளது என்று தான் எனக்கு தோன்றுகிறது. நாளொன்றுக்கு 50000 ரூபாய் வருமானம் ஈட்டும் கடைகளில், கேமரா கண்காணிப்பதற்கு இந்த இலவச தொலைக்காட்சிகள் பயன்படுத்த படுகிறதை நான் பார்த்திருக்கிறேன். இந்த இலவச தொலைகாட்சி வழங்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன ? அடுத்த முறையும் தாங்களே அரியணையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது இந்த பட்ஜெட். இலவசங்களை அள்ளி தெளித்திருகிறார்கள். மூவாயிரம் கோடி பற்றாகுறை ஏற்படுமாம். ஏன் இப்படி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்க்கு என்ன அவசியம் ? இன்னும் ஓரிரு மாதங்களில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும். டீலக்ஸ் பேருந்து சாதாரண பேருந்துகளாக மாற்றப்படும். காசை வாங்கி ஓட்டை போடும் நிலை இன்று முளைத்துள்ளது. சில ஆயிரங்களுக்கு மனிதர்கள் இங்கே தன சுய உரிமையை இழக்கின்றான். இப்படி இருக்கும் தருவாயில் இந்தியா எங்கே முன்னேற போகிறது. தமிழகத்தில் ஒரு ஆளும் கட்சி உறுப்பினரும் எதிர் கட்சி உறுப்பினரும் சந்தித்து கொள்வதே கிடையாது. வேட்பாளர் ஒருவன் மற்றொருவரை அடையாறிலே எதிர்த்து பிரச்சாரம் செய்தால் , அந்த வேட்பாளர் இவரை தாம்பரத்தில் விமர்சனம் செய்வார். அமெரிக்காவிலே எதிரெதிர் ஜனாதிபதி வேட்பாளர் கூட மக்கள் மன்றம் முன்பு கூடி தங்கள் கொள்கைகளை விளக்கி கூறுவர். மனிதனே, சில ஆயிரத்திற்கு உன்னை விற்று உன் சுதந்திரத்தை இழக்காதே.

Wednesday, March 17, 2010

கைத்தறி பொருள் காக்க வேண்டும்.

ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் திருப்பூர் நகரம். திருப்பூர் ஏற்றுமதி குழுமம் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. நலிந்து வரும் கைத்தறி ஆடை தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, தமிழக அரசு தன கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வாரம் ஒரு முறையாவது கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். இந்த நடைமுறை கேரளாவில் பின்பற்ற படுவதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய ஆண் தலைமுறையினர் வேஷ்டி உடுத்த கற்று கொள்வதே தன திருமண தினத்தில் இருப்பதாக தோன்றுகிறது. தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதி குழுமத்தின் கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில், நலிந்து வரும் கைத்தறி தொழிலை காப்பற்ற்வதர்க்கு வழி கிடைக்கும். என் மாமா ஒரு கைத்தறி தொழிலாளி. அவர்களுக்கு சம்பளம் வாரம் ஒருமுறை. வாரம் ஒன்றுக்கு அதிக patchஅம ஆயிரம் ரூபாவை தாண்டாது. எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த வருமானத்தில் எப்படி தான் குடும்பம் நடத்துகிறார்களோ என்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்ததுண்டு. வருடம் ஒரு முறை தர்ணா என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படும் சம்பள உயர்வை கேட்டு. ஆனால் கைத்தறி கடை சில நாட்கள் மூடப்படும். பின் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டு அழைக்கபடுவர் ஒரு சிறு சம்பள உயர்வாக இருக்கலாம் இல்லை பழைய சம்பளத்துக்கே திரும்ப அழைக்கபடுவர். இப்படி பட்ட தொழிலாளர் நலனுக்காவது நாம் கைத்தறி பொருள்களை உபயோகிக்க நம்மை தயார் செய்ய வேண்டும்.

Saturday, March 13, 2010

IPL 2010 முதல் போட்டி - Deccan Chargers Vs Kolkota Knight Riders

எதிர்பார்ப்புகளுக்கு என்றுமே குறைவில்லாத IPL கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் இத்தொடரில் பெரும் தோழ்விகளையே கண்டுள்ளது. கடந்த ஆண்டு பயிற்சியாளராக இருந்த புச்சாணனை தூக்கி விட்டு தேவ் வாட்மோரை இந்த ஆண்டு பயிற்சியாளராக்கியது. பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம்மை நியமித்திருந்தது. டாசில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரின் முதல் பந்தை சமிந்த வாஸ் வீச மனோஜ் திவாரி எதிர்கொண்டார். ஷாருக் கானிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் முதல் பந்திலயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் திவாரி. அடுத்து இறங்கிய சௌரவ்வும் தனது ரன் கணக்கை துவங்காமலயே பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரின் இறுதியில் வாஸ் ஒரு ரன் மட்டுமே விட்டு கொடுத்து இரண்டு விக்கெட்டை எடுத்தார். அடுத்து வந்த பேட்ஸ்மென்களும் விக்கெட்டை இழந்தனர். 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் நான்கு விக்கெட்களை இழந்திருந்தனர் நைட் ரைடர்ஸ் அணியினர். அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு களத்தில் இருந்த ஒவைஸ் ஷாஹ் மற்றும் ஏஞ்செலோ மேதிவ்ஸ் ஈடுபட்டனர். நிதானமாக ஆட்டத்தை துவங்கிய இருவரும் பின் அதிரடியில் மிரட்ட டெக்கான் சார்ஜர்க்கு 162 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிரடியாக துவக்கியது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. லக்ஷ்மணனும் தன பங்களிப்பை பதிவு செய்தார். கில்க்ரிஸ்ட் அதிரடியாக விளையாட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு வெற்றி உறுதி என்றே தோன்றியது. லக்ஷ்மணன் தனக்கு பரிச்சயமே இல்லாத ஷாட் ஆட நினைத்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிப்ஸ் அடித்து விளையாடினார். இடையில் கில்க்ரிஸ்ட் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்பினை நைட் ரைடர்ஸ் அணியினர் தவற விட்டனர். கில்க்ரிஸ்ட் அரை சதம் கடந்த நிலையில் தவறான பந்தை பவுண்டரிக்கு அடிக்க நினைத்து திவாரியிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை பறி கொடுத்தார். பின் கிப்ஸ், சைமண்ட்ஸ், ரோஹித், அனிருத் என அனைவரும் தவறான பந்தில் தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். போட்டி விருவிருப்பாகியது. கடைசி கட்டத்தில் 30 பந்தில் 40 ரன் எடுக்க வேண்டியிருந்தது. இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த், சார்ல்ஸ் லாங்க்வெல்ட், மேதிவ்ஸ் வெற்றியை நைட் ரைடர்ஸ் அணிக்கு தேடி தந்தனர். அணி வெற்றியில் ஷாருக் நிம்மதி அடைந்திருப்பார்.


ஆட்ட நாயகன் : ஏஞ்செலோ மேதிவ்ஸ்
அதிக 6 அடித்தவர் : ஏஞ்செலோ மேதிவ்ஸ்
சிறப்பான கேட்ச் : ஹெர்ஷெல் கிப்ஸ்

Tuesday, March 9, 2010

7/G ரெயின்போ காலனி படம் பார்த்த அனுபவம்.

கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு நடந்து கொண்டிருந்த நேரம். 2004 ஆம் ஆண்டில் வெளியானது செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த 7/g ரெயின்போ காலனி திரைப்படம். தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடித்த படம். நான், கேசவன், லக்ஷ்மணன், பாண்டியராஜா, ரவி, கோபால்(மச்சான்), விஜி, மாரிசாமி என்று ஒரு கூட்டமா தான் கல்லூரியில இருப்போம். ஆனால் இந்த கூட்டத்தில் எங்க பாத்தாலும் வெளியில சுத்துறது நான், லக்ஷ்மணன், கேசவன், பாண்டி, கோபி, விஜி பெரும்பாலும் இருப்போம். நாங்க எங்க வெளில சுத்துனாலும் தங்குறது எங்க வீடு, லக்ஷ்மணன் வீடு, கேசவன் மற்றும் பாண்டி வீட்ல தங்குவோம். அப்படி தான் ஒரு நாலு லக்ஷ்மணன் எங்க எல்லாரையும் விருதுநகர்ல உள்ள ஒரு அனாதை இல்லத்துல அவன் நண்பன் ராஜ்குமாரோட அம்மா ஒரு வேளை அங்கிருக்கிற ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக இருந்தது. அவங்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உதவிக்காக நாங்க அங்க சென்றோம். எனக்கு தெரிஞ்சு முதல் தடவையா ரவி எங்களோட வந்திருந்தான். சாயுங்காலம் வரை அந்த ஆதரவற்ற இல்லத்தில் இருந்து அங்கே உதவி புரிந்தோம். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் லக்ஷ்மணன் வீட்டிற்கு திரும்பினோம். நாங்கள் அடிக்கடி லக்ஷ்மணன் வீட்டில் தங்கி இருக்கிறோம். எங்களுக்கு என்றே கீழ்தளத்தில் தங்குவதற்கு என்று ஒரு அறை இருக்கும். இரவு நேரம் நெருங்கும் பொழுது படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்பொழுது தான் 7/G ரெயின்போ காலனி படம் வெளியாகி இருந்தது. ஆனால் விருதுநகரில் எந்த திரையரங்கிலும் படம் திரையிடவில்லை. அருப்புகோட்டை ராணி திரையிரங்குக்கு போகலாம் என்று முடிவு செய்து அனைவரும் கிளம்பினோம். மொத்தம் 7 நபர் மூன்று வண்டிகளில் போனோம். படம் திரையிடபோவதர்க்கு பத்து நிமிடம் முன்பாகவே 30 கிலோமீட்டர் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டோம். ரவி டிக்கெட் எடுப்பதற்கு அனுப்பி வைத்தோம். ரவி அங்கே பாக்ஸ் 7 டிக்கெட் கேட்க, அது இந்த திரையரங்கில் கிடையாது, வேணும்னா deluxe டிக்கெட் போடவான்னு கேட்க சரி என்று சொன்னதும், எங்கள் 7 பேருக்கும் deluxe டிக்கெட் கொடுக்கப்பட்டது. நாங்க திரையரங்கில டிக்கெட் கிழிக்கரவண்ட டிக்கெட் குடுத்ததும், 'சார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாங்க ரெடிபன்னிகிரோம்னு சொல்லிட்டு இன்னொரு நபரிடம் deluxe டிக்கெட் 7 ரெடி பன்னுப்பனு யாருக்கோ கட்டளையிட்டார்'. எங்களுக்குள் ஒரு கேள்வி deluxe டிக்கெட் எப்படி இருக்குமோனு. எங்கள் என்ன ஓட்டம் மனதில் இருந்து விலகுவதற்குள் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். எங்களுக்கு அதிர்ச்சி deluxe இருக்கையை பார்த்ததும். கடைசி வரிசையில் ஆளுக்கொரு supreme நாற்காலி இருந்தது. ஒரு மின்விசிறி கூட கிடையாது. தலைக்குமேலே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்களா என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் அன்று நிறைவேறியது. படம் பார்க்க வந்த பாதி பேர் எங்களை பார்த்து விட்டு சென்றனர். எங்களுக்குள் அடக்க முடியாத சிரிப்பு இப்படி ஏமாந்து விட்டோமே என்று. படம் ஆரம்பமானது....நல்ல படியாக படம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். விருதுநகர் ஊர் எல்லை வரை எந்த பிரச்சனை இன்றி வந்தோம். சரி இனிமேல் மெயின் ரோட்டில் வந்தால் போலீஸ் பிடிப்பார்கள் என்று விருதுநகர் தெரு சந்துக்குள் வந்து கொண்டிருந்தோம். ஆனால் எங்களை மூன்று இடத்தில போலீஸ்காரர்கள் பிடித்து விசாரித்தனர். எங்களை விசாரித்த நேரம் மணி நள்ளிரவு ஒன்று இருக்கும். எங்கே போயிட்டு வரீங்கடனு கேட்டதுக்கு படத்துக்கு போயிட்டு வர்றோம் சார்னு சொல்லிகொண்டிருக்கிருப்ப, போலீஸ்காரர் எங்களுக்கு இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் வெளில சுத்தகூடாதுன்னு அட்வைஸ் பண்ணத கேட்டுட்டு அங்க இருந்து கிளம்பி லக்ஷ்மணன் வீட்டை வந்து அடைந்தோம். பின்ன கொஞ்ச நேரம் நடந்ததை எல்லாம் சிரிச்சு பேசி அப்படியே தூங்குனத மறக்க முடியாது. இப்போதும் deluxe என்கிற வார்த்தையா பார்க்கும் போதே, இல்ல படிக்கும் போதோ அந்த திரையரங்க அனுபவம் மனசுக்குள்ள நிழலாடும்.

என் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

முதலில் என் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நான் இன்று வாழ்க்கையில் ஓரளவிற்கு சந்தோசமாக வாழ்வதற்கு ஆதாரமே என் அம்மா மற்றும் என் அப்பாவினால் தான். என்னுடைய சிறு வயதில் என் காலில் கட்டி மாதிரி இருக்கும். நடப்பதற்கு மிகவும் கஷ்ட படுவேன். ஆனால் விளையாட்டு என்றால் மட்டும் அந்த ஏரியாவில் இருக்கும் பழனி, விஜி, செந்தில், ரமேஷ் (எல்லோரும் என்னை விட வயது கூட உள்ளவர்கள்) அண்ணன்கள் கூட சென்று விளையாடுவேன். விளையாட்டின் நடுவே என் அம்மா என்னை கண்டித்து கூட்டி சென்று விடுவார். நான் நடக்க கஷ்ட படுவேன் என்பதற்காக என்னை பள்ளிக்கூடம் வரை என் அம்மா என்னை தூக்கி கொண்டு செல்வார். அது போல மணி 12:15 நெருங்கும் பொழுது பள்ளியறை வாசல் கதவருகே என் அம்மாவின் முகம் பளிச்சென்று தெரியும். எனக்காக மதிய உணவை ஊட்டுவதற்காக வந்திருப்பார். அது போல சாயுங்காலம் பள்ளி முடியும் நேரம் என் அம்மா வந்தது என்னை சுமந்து கொண்டு செல்வார். பின்னர் மாரிமுத்து சார் டியூஷன் செல்லும் பாதை வரை என் அம்மா என்னை சுமந்து கொண்டு கூட்டி செல்வதை என்னால் என்றும் மறக்க முடியாது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். சில நாட்கள் கழித்து பாலகிருஷ்ணன் என்றொரு மருத்துவர் என் காலில் இருந்த கட்டி மாதிரி இருந்ததற்கு காரணம் வைட்டமின் குறைபாடு என்று சொல்லி ஒரு மருந்து கொடுத்தார். பின்பு அந்த காயம் முழுவதும் குணமானது. நான் +2 படிக்கும் பொழுது அதிகாலை எழுந்து படிக்கையில் , என்னுடன் என் அம்மாவும் விழித்து கொண்டு நான் சோர்வாக இருக்கும் நேரத்தில், காப்பியும் எதாவது சாப்பிட குடுப்பார். பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி காலமும் முடிந்தது. நான் வேலை தேடிய நாட்களில் நான் பல முறை தோல்வி அடைந்தாலும், என் அப்பா மற்றும் என் அம்மா எனக்கு ஆறுதல் வார்த்தை கூறி என்னால் முடியும் என்று ஒரு வார்த்தை சொல்வர். கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஒரு வேலை கிடைத்தது. அதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் முடிந்தாகிவிட்டது. எனது இந்த சந்தோசமான வாழ்க்கைக்கு அடித்தளம் இட்ட என் அம்மா மற்றும் என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்ல வேண்டும். இந்த தருணத்தில் என் அம்மாவிற்கு இந்த வலை குறிப்பின் மூலம் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Monday, March 8, 2010

மனதுக்கு ஆறுதல் தந்த ஒரு பயணம்

கடந்த மாதம் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்கு தூத்துக்குடி சென்றிருந்தேன். செவ்வாய் கிழமை இரவு முத்து நகர் ரயிலில் பயணம் செய்தேன். வெள்ளி கிழமை ஒரு கல்யாணத்திற்கும் செல்ல வேண்டி இருந்ததால் குறைந்தது மூன்று நாட்களாவது விடுமுறை எடுத்தாக வேண்டும். சற்று நினைவு கூர்ந்து பார்த்தால், சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாவது இருக்கும் நான் வளர்ந்த ஆலங்குளத்திற்கு சென்று. சரி எப்படியாவது ஆலங்குளம் சென்று விட வேண்டும் என்று ரயில் பயணத்தின் நடுவே திட்டமிட்டு கொண்டேன். புதன் கிழமை விடியல் தோன்றியது. ஏனோ மனதிற்குள் ஒரு சந்தோசம் வட்டமிட்டு கொண்டு இருந்தது தென் தமிழகத்தை பார்க்கையில். முள் நிறைந்த வேலி மரம் அழகாய் தெரிந்தது. ரயில் தூத்துக்குடி சென்றடைந்தது. ஒரு ஆட்டோ பிடித்து நானும் என் நண்பன் கோபாலும் ஹோட்டல் ஆல்வின் சென்றோம். அங்கே சக நண்பர்கள் ஏற்கனவே தங்கி இருந்தனர். பின் அனைவரும் கிளம்பி நண்பரின் கல்யாணத்திற்கு சென்று, எங்கள் வருகையை பந்தியில் பதிவு செய்தோம். கல்யாணம் நன்றாக நடந்து முடிந்தது. பின் நான், மாரிசாமி மற்றும் கோபால் சிவகாசி செல்லும் பேருந்தில் கிளம்பினோம். நானும், மாரிசாமியும் கோவில்பட்டியில் இறங்கினோம். நான் ஆலங்குளம் செல்ல வேண்டும் என்பதற்காக தாமரை பேருந்திற்காக காத்திருந்தேன். அதே பேருந்தில் தான் கல்லூரி நாட்களில் நானும், செந்திலும் காத்திருந்து வெம்பகோட்டையில் இருந்து பயணம் செய்வோம். ஒருவாறாக பேருந்து ஆலங்குளம் வந்தடைந்தது. நான் அடிக்கடி வடை சாப்பிடும் சங்கரேஸ்வரி டீ ஸ்டாலில் ஒரு டீயும், இரண்டு வடையும் சாப்பிட்டேன். ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அங்கு கூடம் மட்டும் குறையவே இல்லை. முன்பு நான் ஆலங்குளத்தில் இருந்த காலத்தில், ஸ்டேஷன்ன்றி பொருள்களை லட்சுமி ஸ்டோர்ஸ்ல வாங்குவேன். அந்த கடை காரர் என்னிடம் நன்றாக பேசுவார். ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதே, என்னை அடையாளம் தெரியாது என நினைத்தேன். அவர் சரியாக என்னை கண்டுபிடித்து, தம்பி எப்படி இருக்கிறீங்க ? அப்பா எப்படி இருக்கிறாங்கன்னு கேட்டார். சென்னையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் 'ஏய் எப்படி இருக்க' என்று ஒருமையில் தான் வரவேற்ப்பு இருந்திருக்கும். இங்குள்ள மக்கள் இப்படி பழகி விட்டனர் இதை தவறு என்று எடுக்கவில்லை. சரி நான் தங்கி இருந்த சிமெண்ட் ஆளை குடியிருப்பிற்கு போகலாம் என்று நினைத்து பேருந்திற்காக காத்து கொண்டிருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் ராதா அத்தையை (அவர்களது மகன் பெயர் ராதாகிருஷ்ணன்) எதேச்சையாக பார்த்தேன். நானாக சென்று அவர்களிடம் அறிமுக படுத்திகொண்டேன். ஏனன்றால் அவர்களை பார்த்து ஒரு பத்து வருடமாவது இருக்கும். அவர்கள் என் கன்னத்தை கில்லி விட்டு (பாசத்துடன்) எப்படி செல்வம் இருக்க என்று கேட்டாங்க. ரொம்ப சந்தோசமாக இருந்தது. சரி என்று அவர்களிடம் விடை பெற்று கொண்டேன். நான் ரொம்ப நேரமாக காத்து கிடந்த பேருந்து வந்ததும் வேகமாக சென்றேன். ஆனால் ஒரு அதிர்ச்சி செய்தி என்னவென்றால் பேருந்து சிமெண்ட் ஆலை குடியிருப்புக்கு போகாது. நான் சென்று பேருந்து ஓட்டுனரிடம் காரணம் கேட்டால், அவர் சொன்ன பதில் 'அங்க ஏற கூடிய ஒன்று அல்ல ரெண்டு பேருக்கெல்லாம் வண்டி உள்ள போகாது சார்' என்று சொன்னார். நான் அங்கே தங்கியிருந்த காலத்தில் சுமார் நானூறு குடும்பம் இருக்கும். அந்த காலனியை கடக்கும் பொது எங்கும் கல கலப்பாய் இருக்கும். சரி என்று அதே பேருந்தில் பயணம் செய்து ராஜபாளையம் பயணமானேன். போகும் வழியில் பிரமிப்பாய் இருக்கும் சிமெண்ட் ஆலை சிம்னியை பார்க்கும் பொழுது மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அருமையான பயணம். அடுத்த முறை செல்லும் பொழுது கட்டாயம் சிமெண்ட் ஆலை குடியிருப்பிற்கு செல்ல வேண்டும் என்று மனதில் சொல்லி கொண்டே இங்கே எழுதுகிறேன்.

Thursday, March 4, 2010

மன அழுத்தம் தான் காரணமோ ?

நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு எனது கிறுக்கள்களை தொடர்கிறேன். கடந்த சில நாட்களாக ஏதோ ஒரு நினைவு என்னை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் என்னில் இருந்த ஒரு தைரியம் மற்றும் துணிச்சல் கொண்ட ஒருவன், எனக்குள் இப்பொழுது இருக்கிறானா என்று தேடுகிறேன். நான் வேலை தேடிய நாட்களில் தோல்விகளை கண்டு துவளாத மனம், இப்பொழுது ஏன் புது முயற்சிகளை எடுக்க தவிக்கின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் தோல்விகளை தாங்கி கொள்ளும் மனம் என்னிடம் மறைந்து விட்டதா? நடப்பவைகளை நினைவு கூர்ந்தால், எனது எதிர்காலம் !(இந்த ஆச்சர்யகுரிதானா ?). ஒரு வேலை விடா முயற்சி குணத்தை கை விட்டுவிட்டேனா ? எனக்குள் இருக்கும் சுமை தான் காரணமோ ? கேள்விகள் பல இருக்க விடை மட்டும் இன்னும் கிடைக்க பெறவில்லை.

Wednesday, January 13, 2010

வேட்டைக்காரன் திரைப்பட விமர்சனம்

நான் கடந்த வாரம் வேட்டைக்காரன் திரைப்படம் பார்த்தேன். ஏன் விஜய்க்கு இப்படி படம் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ ? ஒரு திரைப்படம் பார்த்து திரையரங்கை விட்டு வெளிவரும்போது அந்த திரைபடத்தின் தாக்கம் ஒரு சில நிமிடங்களாவது இருக்க வேண்டும். ஆனால் திரைப்படம் எப்பொழுது முடியுமோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் சன் தொலைக்காட்சியினர் மட்டும் எப்படி தான் இந்த திரைபடத்தை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று பொய் விளம்பரம் செய்கிறார்களோ ? நான் சமீபத்தில் பார்த்த மோசமான திரைப்படம் என்றால் இதை தான் முதலாக சொல்வேன். நான் ஒரு காலத்தில் விஜய் படங்களை விரும்பி பார்த்தவன். ஆனால் இப்பொழுது விஜய் படம் என்றால் பார்பதர்க்கே மனம் இல்லாமல் பார்க்க வேண்டியுள்ளது. சக நடிகர்கள் திரைபடத்திற்காக தங்களை பல வடிவங்களில் திரை முன் கொண்டு வரும் காலத்தில், தலையில் கலர் அடித்தல் ஒரு நாயகன் என்றும் கலர் இல்லை என்றால் வேறு ஒரு விஜய் என்றும் நம்மிடம் புதிர் போடுகிறார். சக நடிகரான சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் அட்டகாசமாக தன்னை திரையில் வெளிபடுத்தியிருப்பார். வேட்டைக்காரன் திரைபடத்தில் ஒரு காட்சியில் கல்லூரி பேராசிரியர் பாடம் எடுபதர்க்கு முன்னாள் ஒரு மனைவியை பார்த்து சரியாக தலை முடியை வைத்து கொள்ளாமல் இருப்பதை கண்டிப்பார். ஆனால் கதாநாயகன் விஜய் சட்டை பித்தானை கழற்றி விட்டு பனியன் தெரியும் படி உட்கார்ந்திருப்பார். சுருக்கமாக சொல்ல போனால் விஜய் தன படத்தில் கதையை நம்பி நடிக்க வேண்டும். படம் பார்த்து முடித்தவுடன் இரண்டு அரை மணி நேரம் வீனக்கியதருக்கு பதிலாக வீட்டில் தூங்கியிருக்கலாமே என்று நினைக்க தோன்றுகிறது. தரமான படங்களின் வருகை தமிழ் சினிமாவில் குறைந்து வருகிறது என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாக இந்த படத்தை சொல்லலாம். இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்தார் நிம்மதியாக இருப்பர் நல்ல வேலை இந்த படத்தை சன் பிச்சருக்கு போனி செய்தாச்சு என்று. விஜய் காதலுக்கு மரியாதை மாதிரி ஒரு நல்ல கதையம்சம் உள்ள படம் தர வேண்டும். இல்லையேல் சீக்கிரம் நடையை கட்ட வேண்டியது தான். :) . விஜய் ஆண்டனி மட்டுமே படத்திற்கு ஒரு ஆறுதல்.