Monday, May 30, 2011

சென்னை சூப்பர் கிங்ஸ் - அபார வெற்றி

இறுதி போட்டி ஆரம்பத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சாதகமாக இருந்தது. கடந்த ஆண்டு சொடுக்கு பாலாஜி இருந்தே கோப்பை கைப்பற்றிய சென்னை அணி இந்த முறை ஜெயித்ததில் எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. வழக்கம் போல அஸ்வின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. சுழல் பந்து வீச்சுக்கு எப்போதுமே சென்னை ஆடுகளம் ஒத்துழைக்கக் கூடியதாக இருக்கும். சென்னை அணி இந்த வருடம் ஃபீல்டிங்கில் சிறப்பானதாக இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ட்வெயின் பிராவோ ஃபீல்டிங் செய்யும் பொழுது ஒரு முழு ஈடுபாடு இருக்கும். அது போல தான் மும்பை இண்டியன்ஸின் கெய்ரோன் பொல்லார்ட். நம்ம சென்னை அணி பசங்கட்ட அது இல்லன்னு சொல்ல வரல. ஆனா ஃபோட்டொக்கு போஸ் குடுக்கனும்னு தோனுது. உதாரணத்துக்கு சொல்லனும்னா பத்ரினாத்துக்கு கைல வர பந்த கூட புடிச்சிட்டு ஒரு பல்டி அடிக்கனும்னு தோனுது. அது போல முரளி விஜய்க்கு கிழக்கு நோக்கி வர கேட்ச் மேற்கு நோக்கி கை வைச்சு பிடிச்சா ஆகாதுன்னு எந்த ஜோசியக்காரன் சொன்னான்(ர்) தெரியல. வடக்கு அல்ல தெற்கு நோக்கி கை வைச்சு பிடித்தால் தான் அனுகூலம்னு சொல்லிருக்கக்கூடும்னு நினைக்கிறேன். இந்த வருடம் ஒரு பெரிய அதிசயம் ஜகாடி ஃபீல்டிங்கில் கடந்த ஆண்டை விட மிக சிறப்பாக செய்தது. ஐ.பி.எல் ஐ விளம்பரப் படுத்த, ஒ இட்ஸ் பீன் எ காமெடி ஆஃப் எர்ரர்ஸ் நு தன்னை கிண்டலடிச்ச ஹர்ஸா போக்லேவை தன்னுடைய மோதிரக் கையால் கொட்டினாலும் தப்பில்லை. பேட்டிங்கில் ஹஸ்ஸி ஆரம்பத்தில் இருந்தே கலக்கினார். முரளி விஜய் கடைசி போட்டியில் கை கொடுத்தார். மற்றபடி பேட்டிங்கில், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேனின் பொறுப்பான ஆட்டத்தை பார்க்க முடிந்தது. ஆல்பி மார்க்கல்லின் அதிரடியான பேட்டிங் அறுமையாக இருந்தது. ரெய்னா, தோனி, பத்ரினாத், சகா, பிராவோ வெற்றிக்கு உதவினர். பொலிஞ்சர் பந்து வீச்சு நன்றாக இருந்தது. வெற்றிக் களிப்பில் பொலிஞ்சர் மற்றும் பிராவோவின் ஆட்டம் சூப்பர். அதிலும் பிராவோ குத்துப்பாட்டுக்கு போட்ட ஆட்டம் ஏதோ நம்ம ஊர் பையன் சாவுமேளத்துக்கு ஆட்டம் போட்ட மாதிரி இருந்தது. இன்னொரு விஷயம், தோனி மட்டும் கூல் கிடையாது, உண்மையில சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர், குருநாத் மெய்யப்பனும் கூல் தான்.

Tuesday, May 24, 2011

ஆட்சி மாற்றம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். எதிர்பார்த்த மாதிரி சில அதிகாரி மாற்றம் நடைபெற்றது. சட்டசபை திரும்பவும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறியது. ஓமந்தூரில் புதிதாக அமைந்துள்ள சட்டசபை இன்னும் ஐந்து ஆண்டுகள் பயனற்று கிடக்கப் போகிறது. எப்படியோ மக்கள் வரிப் பணம் 1300 கோடி வீணடிக்கப்பட்டது. எந்த ஆட்சி மாற்றம் வந்தாலும், முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தடுக்கப்படாமல், தொடர்ந்தால் நல்லது. இலவசங்களை அல்லிக் கொடுத்து, அரச கஜானாவை காலி செய்வதை விட, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இலவசங்களாக கொடுப்பவற்றை மக்களே வாங்கும் நிலை வர வேண்டும். சமச்சீர் கல்வியை எடுத்த எடுப்பிலே வேண்டாம் என்று சொல்லும் இந்த அரசாங்கம், சற்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். விரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகர், சுருக்கப்பட்டு கே.கே நகராக உருப்பெற்றது. மறைக்கப்பட்ட ஜே.ஜே நகர் திரும்பியது. ஆமாம், முகப்பேர் மேற்கு, ஜே.ஜே நகராகியது. எனக்கு தனிப்பட்ட முறையில் கடந்த ஆட்சியில் மிகவும் பாதித்த விஷயம் என்றால், கலைஞர், அண்ணா நினைவகத்தில் நிறைவேற்றிய ஒரு கபட நாடகம். அடுத்தவன் சாவில் குளிர் காய நினைத்தது மிக பெரிய பாவம். தன் பிள்ளை, பேரனுக்கு ஆட்சியில் துண்டு போட, டெல்லி விரைந்தோடும் பொழுது, லட்சக்கனக்கில் உயிரழந்த தமிழனுக்கு ஒரு அதிகாரக் குரல் கொடுக்காதது ஏன்? கேட்டால், கடிதம், தந்தி அனுப்பியதாக சொல்வர். ஏன் அவருடைய பிள்ளை, பேரனுக்கு அமைச்சரவையில் இடம் கேட்க தந்தி அனுப்பியிருக்கலாமே ?. ஒரு வேளை, தம் கடிதம் சேரும் முன், தகவல் தொழில்நுட்பம் வேரு ஒருவருக்கு சென்று விடுமோ என்ற பயமாக இருக்கும். அடுத்தபடியாக ஸ்பெக்ட்ரம்(Spectrum) ஊழல், ஒரு முட்டாள்த்தனமான செயலால், நாட்டின் பொருளாதரத்திற்க்கு ஒரு லட்சத்திற்கு எழுபத்தி ஆறாயிறம் கோடி இழப்பு. இதற்கு முன் லாலு பிரசாத் யாதவ் தான், பெரிய ஊழல்வாதி என்ற எண்ணம் தவிடு பொடியானது. முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற வண்ணம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கினாராம். எங்கு வந்தவற்க்கு, கலைஞர் டிவி அலுவலகத்திற்க்கு வந்தவருக்கா என்று ராஜா தான் தெளிவு படுத்த வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யனும்னு யாரும் அரியனை ஏறவில்லை என்பது எனக்கு தெரியும். மொத்தத்துக்கும் காலி பன்னிட்டா அடுத்து வரவிருக்கும் அமைச்சர் அவன் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவான். தேவைக்கு மட்டும் அரச கஜானாவில் எடுத்துக்கோங்க.

Wednesday, September 1, 2010

தபால்கார தம்பதிகள்

கடந்த வாரம், நான் வசிக்கும் தெருவில் 40 வயது மதிக்கதக்க ஒரு பெண் எதையோ தேடி அலைந்து கொண்டிருந்தார். பிள்ளையார் கோவிலை சுற்றுவதை போல எங்கள் தெருவையே சுற்றி சுற்றி வந்து நடந்து கொண்டிருந்தார். என் அப்பா அந்த பெண்ணிடம், எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்கள். அதற்க்கு அந்த பெண் தன்னை அந்த பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தபால்களை கொடுப்பவர்(Post [wo]man) என அறிமுகபடுத்தி கொண்டார். ஒரு விலாசத்தை கேட்டார் அந்த பெண்மணி, என் அப்பா அந்த முகவரி இருக்கும் வீட்டை அடையாளம் காட்டினார். அந்த பெண்மணியிடம், ஏன் நடந்தே வர்றீங்க, ஒரு டூ-வீலர்ல வர்ற வேண்டியது தானே என்று கேட்டுள்ளார். அந்த பெண்மணிக்கு சைக்கிளே ஓட்ட தெரியாதாம். அப்புறம் எப்படி எல்லா தபால்களையும் கொடுக்க முடியும் என்று என் அப்பா கேட்டுள்ளார். அவரோ, முடிந்தவரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் நடந்து சென்று தபால்களை கொடுப்பாராம். மற்றவை எல்லாம், திரும்ப தபால் நிலையத்தில் வைத்து விடுவாராம். அவருடைய கணவரும், பக்கத்துக்கு ஊரில் போஸ்ட்மேன் வேலை செய்கிறாராம். அவருடைய வேலையை சீக்கிரம், முடித்து கொண்டு இங்க வந்து அவர் மனைவியின் வேலையை செய்வாராம். எங்கள் ஏரியாவில் தபால்க்காரர் , ஞாயிறு கிழமைகளிலும் வேலை செய்கிறார். ஒரு நாள், காலை 6 மணி அளவில், வெளியில் சென்று கொண்டிருக்கையில், கையில் தபால்களுடன், விலாசத்தை தேடி அந்த கணவர் அலைந்து கொண்டிருந்தார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிறந்த தம்பதிகள். எப்படியோ எங்களுக்கு வர வேண்டிய கடிதம் வந்து சேர்ந்தால் கூடுதல் நலம் :)

Friday, August 13, 2010

வேலை தேடிய நாட்கள்

சென்னை சென்றவுடன் வேலை கிடைத்து விடும் என்ற பெரும் நம்பிக்கையில் இங்கே வந்து இறங்கி ஏமாந்து போனோம். நான், கேசவன் மற்றும் விநாயகமூர்த்தி மூவரும் மதுரையில் இருந்து சென்னை வந்தோம். முதல் முதலாக தாம்பரத்தை அடுத்து உள்ள பழைய பெருங்களதூரில் தங்கி இருந்தோம். அடுத்ததாக விஜயநகரில் வெங்கடேஸ்வர நகரில் சிறிது காலம் தங்கி இருந்தோம். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. அந்த சமயம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தவர்கள் என் அப்பா மற்றும் அம்மா. தொடர்ந்து வேலை தேடி கொண்டிருக்கையில் நாட்களும் நகர்ந்தன. அங்கிருந்து பின்பு வேளச்சேரி TNHB காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். நான், கேசவன், விநாயகமூர்த்தி, மாரிசாமி மற்றும் பாண்டி தங்கினோம். ஒரு சமயம் வீட்டில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை 13 ஐ தொட்டது. சில நேரம் ஒருவன் கால் மற்றவனுக்கு தலையனையாகவும் இருக்கும். தங்கி இருந்த அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் எங்கள் சம்பளத்தை எதிர்நோக்கி எங்கள் குடும்பம் காத்திருந்தன. வேலை இல்லை என்கிற கவலையை தவிர எல்லா நேரமும் எங்களுக்குள் சந்தோசம் புரையோடி கொண்டிருக்கும். எந்த நேரமும் கிண்டலும் கேலியும் இருக்கும். அடுத்ததாக எங்கள் வாடகை வீட்டிற்கு வந்தவன் கோபால்சாமி. அடுத்ததாக வந்தவன் நோயல். அடுத்து ரிச்சர்ட், ஹுசைன் (சதீஷ்), ரவீந்திரன். இதுல கொஞ்சம் நேரம் படிப்போம், நிறைய நேரம் பேசி சந்தோசமா இருப்போம். எங்களுக்கு அந்த வீடு ஒரு உள்விளையாட்டு அரங்கம் கூட. உள்ளேயே கிரிக்கெட் விளையாடுவோம். நல்லா அந்த ஹால்ல படுக்கனும்ன மூன்று நபர்கள் படுக்கலாம். ஆனா அந்த ஹால்ல கூட 3 பேரு பீல்டிங் நிப்போம். ராத்திரி வரை சீட்டு விளையாட்டு. சமைக்க காஸ் சிலிண்டர் வீட்டு சொந்தக்காரரே குடுத்ததால, மூணு வேலை சமையல் நடக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைல சமைக்கணும். இதுல பாண்டி சமைக்கணும்னு சொல்லிச்சுன்ன கடைக்கு போயி ரவை வாங்கி வந்து கிண்டி வைப்பான் உப்பு போடாம....காலை வேலைல உப்புமாவ உப்பு இல்லாம சாப்பிட்ட எப்படி இருக்கும். அவனிடம் கேட்டா தெரியாம செஞ்ச தப்புன்னு சொல்லுவான். சில நேரம் பஞ்சாயத்து நடக்கும். செலவு கணக்கு எல்லாம் விநாயகமூர்த்தி பாத்துக்குவான். நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தும் குழம்ப கடைசி வரைக்கும் கட்டிய வச்சு சாபிடதே இல்லை. சாதத்துல நாங்க வச்ச குழம்ப ஊத்தி சாப்பிட்டா ரெண்டும் ஒட்டவே ஒட்டாது. அப்படி இருந்தாலும், ஒரு பெரிய பாத்திரத்தில செய்ற சாப்பாடு கடைசில சாபிடுவனோட நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இருக்கிற சாப்பட்ட நிரந்து சாப்பிடுவோம். என்ன குழம்பு வச்சாலும் கடைசில மல்லி இழை போட்டு முடிச்சு வைப்போம். ஊறுகாய் தான் தினசரி தொட்டுக்கிரதுக்கு இருக்கும். இது பரவாயில்லை காலைல சம்பா ரவை உப்புமா சாப்பிட்டு நாக்கு செத்து போன காலம் மறக்கவே முடியாது. சென்னைல வேலை கிடைச்சும் உப்புமாக்கு பயந்து ME படிக்க போனவன் எல்லாம் உண்டு. நாயர் கடைல டீ, சலூன் கடைல டிவி, அரட்டை அடிக்க மளிகை கடை சரவணன். சாயுங்காலம் வெளில கிரிக்கெட். வாய் பேசறதுக்கு முன்னாடி வீட்டு சொந்தக்காரரோட பையன எல்லாம் அடிச்சது நினைவுக்கு இருக்குது. யாருக்காவது உடம்பு சரியில்லைனா, மத்தவங்களுக்கு எல்லாம் மஜா தான். ஒரு தடவை மாரிசாமிக்கு தூங்கி கிட்டுரிக்கிற சமையத்துல நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதுக்கு, தூங்கி கிட்டிருக்க எல்லாரும் எந்திரிச்சு சிரிச்சத மறக்கவே முடியாது. யாரவது interview க்கு போனா போதும், அவன் திரும்ப வரும் பொழுது அவன சுத்தி ஆடுரதுக்குனு ஒரு கூட்டம் இருக்கும். ஒவ்வொருத்தரோட போர்வையை முகர்ந்து பார்த்தா அந்த மயக்கதுலையே தூங்கிறலாம். நாங்க பௌடர மூஞ்சில அடிச்சத விட அடுத்தவன் அக்குள்ள போட்டது தான் அதிகமா இருக்கும். எப்பவாவது எங்க எதிர் வீட்டு அக்கா அவங்க வீட்டில செஞ்ச சாப்பாட குடுப்பாங்க. அதில எல்லாரும் போட்டி போட்டு பறிச்சு சாப்பிடுவோம், அந்த கூட்டதில எனக்கு கொஞ்சம்னு கை நீட்டிற ஒரே ஜீவராசி கோபால்சாமி மட்டுமே. இன்னும் நிறையா எழுதிட்டே போகலாம். வேலை தேடிய அந்த நாட்கள்ல எல்லோரும் நல்லா மனம் விட்டு பேசுவோம். இப்ப எல்லாம் பேசுறதே குறைஞ்சு போச்சு. ஆனால் எல்லாரோட மனசுலயும் நினைவுகள் இருக்கும்னு நினைக்கிறேன்.

Tuesday, June 22, 2010

வயோதிக பெற்றோரை குழந்தையாக நினையுங்கள்....

சமீபத்தில் என் அலுவலக ப்ளோகில் படித்த ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அதை அப்படியே இங்கே எழுதுகிறேன். ஒரு வயதான தந்தை தன மகன் அருகில் அமர்ந்து இருந்தார். அங்கே சற்று தூரத்தில் ஒரு காக்கை வந்து ஒரு மரம் அருகில் அமர்ந்து இருந்தது. அதை நோக்கி தன் கை விரலை உயர்த்தி தன் மகனிடம் அது என்னது என்று வினவினார். மகன் தன் தந்தையிடம் அது காக்கா என்று சொல்லி விட்டு தன் கவனத்தை தொலைக்காட்சியில் செலுத்தினார். மீண்டும் ஒரு முறை அந்த தந்தை அது என்னது என்று வினவினார். மகன் மீண்டும் அது காக்கா என்று சொல்லிவிட்டு தன் கவனத்தை தொலைக்காட்சியில் முன்பை விட சற்று வேகமாகவே செலுத்தினான். மற்றும் ஒருமுறை அந்த தந்தை தன் மகனிடம் அது என்ன என்று காக்காவை நோக்கி கை உயர்த்தி கேட்டவுடன் மகன் கடும் கோபத்துடன் தன் தந்தையிடம் எத்துனை தடவை தான் அது காக்கா என்று சொல்ல.....உனக்கு புரியலையா அப்பா என்று கத்தினான். அந்த தந்தை தன் அறைக்கு சென்று ஒரு பழைய குறிப்பேடு(Dairy) எடுத்து வந்தார். சிறு வயது முதல் குறிப்பு எழுதும் பழக்கம் உடைய அந்த தந்தை ஒரு பக்கத்தை எடுத்து தன் மகனிடம் வாசிக்க சொன்னாராம். அந்த பக்கத்தின் குறிப்பு தன் மகனின் சிறு வயது செயல் பற்றிய குறிப்பு. அங்கே இவ்வாறாக எழுதியிருந்தார் அந்த தந்தை 'என் மகன் இன்று என் அருகில் அமர்ந்து கொண்டு என்னிடம் எங்கள் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த காக்காவை நோக்கி அது என்னது என்று என்னிடம் 23 தடவை கேட்டான். நான் அவனிடம் அது பெயர் காக்கா. அது பறக்க கூடிய ஒரு பறவை என்று விளக்கினேன். என் மகன் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நான் அவனை கட்டி பிடித்து கொண்டு கோபம் கொள்ளாமல் அது காக்கா என்று கூறினேன். மிகவும் சந்தோசமாக இருந்தது என் மகனின் செல்ல குரலில் அவன் அது என்னது என்று ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்...' . ஆனால் இன்று அந்த மகன் தன் தந்தை மூன்றாவது முறை கேட்கும் பொழுதே பொறுமை இழந்து கோபத்துடன் பதில் கூறுகிறான். வயதாகும் பொழுது ஒரு முதியவர் குழந்தை குணம் கொண்டவராக மாறுகிறார்கள். ஆகவே சற்று பொறுமையாக அவர்களிடம் கையாள வேண்டும்.

குறிப்பு: மேற்கண்ட விஷத்தை நான் ஆங்கிலத்தில் படித்ததை என்னால் முடிந்த வரை தமிழில் மாற்றியுள்ளேன்.

Thursday, May 6, 2010

தாய் தந்த சீதனம்!

படித்ததில் பிடித்தது (என் அலுவலக ப்ளாகில் சுனில் என்பவர் எழுதியிருந்தார்)

சில நேரங்களில் எங்கேயோ நாம் கேட்ட கதைகள், சம்பவங்கள், விஷயங்களைப் படிக்கும்போது 'ச்சே... இதை முன்கூட்டியே படிச்சிருந்தா, என் விஷயத்துல கொஞ்சம் நிதானமா நடந்திருப்பேனே' என்று நினைக்கத் தோன்றும். அப்படி நம்மை நாமே செதுக்கும் உளியாக சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இது.

ஜூலி-சாலமன் இருவரின் திருமணத்தன்று, புதிதாகத் தொடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீட்டிய ஜூலியின் அம்மா, ''நீ சந்தோஷமா இருக்கிறப்பல்லாம் உன்னால எவ்வளவு பணம் போட முடியுமோ போட்டு வை. அப்படியே என்ன காரணத்துக்காக பணம் போட்டியோ... அதை, பாஸ்புக்குல இருக்கற ரிமார்க்ஸ் ஏரியாவுல எழுதி வை" என்று சொன்னார். மகளின் திருமண சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 2,000 ரூபாயையும் அதில் டெபாஸிட் செய்திருந்தார்.

''நல்ல ஐடியாவா இருக்கே... நாம ரெண்டு பேருமே இந்த அக்கவுன்ட்டில் பணம் போடலாம்" என்று தானும் உற்சாகமாகிவிட்டார் சாலமன்.

'ஜனவரி 800 ரூபாய் - ஜூலியின் பிறந்த நாள். பிப்ரவரி 1,000 ரூபாய் - சாலமனுக்கு புரமோஷன். மார்ச் 400 ரூபாய் - கொடைக்கானல் ஜாலி ட்ரிப் போன சந்தோஷம். ஏப்ரல் 1,000 ரூபாய் - சாலமனுக்கு பிறந்த நாள். மே 3,000 ரூபாய் - நான் அப்பாவாகப் போற இரட்டிப்பு சந்தோஷம்'

- இப்படி நான்கு ஆண்டுகள் சந்தோஷமாகக் கரைந்து கொண்டிருந்த சூழலில், திடீர் சூறாவளி! காரணம் இல்லாமலே அடிக்கடி சண்டைகள் வெடிக்க, ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு போன் செய்த ஜூலி, ''இனியும் இவரோட குடும்பம் நடத்த முடியாது. இவரைப் போய் எப்படிம்மா எனக்குக் கட்டி வெச்சீங்க" என்று புலம்பினாள்.


ஆயிரம் சமாதானங்களும் எடுபடாத நிலையில்... ''ஓ.கே... நீ விரும்பின மாதிரி உனக்கு டைவர்ஸ் வாங்கித் தந்துடறேன். அதுக்கு முன்ன நீ ஒண்ணு செய்யணும். உனக்கு கல்யாணத்தன்னிக்கு நான் கொடுத்த பாஸ் புக்குல போட்ட பணத்தை எல்லாம் முதல்ல பேங்க்ல இருந்து எடுத்துடு. உன் கல்யாணச் சுவடா எதுவுமே இருக்கக் கூடாது" என்றாள் அம்மா.

வங்கி க்யூவில் நின்றபடியே மெதுவாக பாஸ் புக்கை புரட்டிய ஜூலி, ஒவ்வொரு டெபாஸிட் பற்றியும் எழுதப்பட்டிருந்த அந்த சந்தோஷ நினைவுகளைப் படித்துக் கொண்டே போக, இமை மீறியது கண்ணீர்! 'எனக்கு இத்தனை சந்தோஷங்களைத் தந்திருக்கிறாரா சாலமன்!' என்று நினைத்தவள், சட்டென்று வங்கியைவிட்டு கிளம்பி ஓடினாள். ''இந்த பாஸ்புக்ல இருக்கிற பணத்தை செலவழிச்ச பிறகு நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்" என்று சாலமனிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள்.


மறுநாள்... கையில் பாஸ்புக்குடன் வாசலில் நின்றான் சாலமன். ஓடி வந்து அதை வாங்கி பார்த்தவள், அப்படியே அவனை இறுகக் கட்டிக் கொண் டாள்.

பாஸ்புக்கில் இருந்தது - 'டிசம்பர் மாதம் 5,000 ரூபாய்- மனைவியுடனான மோதல் முற்றுப்புள்ளிக்கு வந்த நாள்.

Thursday, April 15, 2010

படித்ததில் பிடித்தது...

நான் சமீப காலமாக இன்டர்நெட்டில் தேடுவது தமிழ் கவிதை தொகுப்புகளை தான். ஏன் இந்த தமிழ் மோகம் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு கருத்தை ஆங்கிலத்தில் படிப்பதை விட தாய்மொழியில் படிக்கும் பொழுது அதன் சுவையை முழுமையாக உணர முடிகிறது. அது போல எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படைப்புகள் என்றால் சொல்வேந்தர் சுகிசிவம் படைப்புகள் என்பேன். ஒரு கருத்தை நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர். அவரது வெற்றி நிச்சயம் கதை தொகுப்பை தற்பொழுது படித்து கொண்டிருக்கிறேன். அவரின் சவாலே சமாளி ஒலிநாடாவை அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். ஒரு ஆண் பெண் உறவு முறையை கூட ஆபாசம் இல்லாமல் சொல்லக்கூடியவர். நகைச்சுவையுடன், அறிவியலையும் விளக்குவதில் வல்லவர். சுகி சிவத்தின் பெருமையை சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அதை போல் ஒரு சில நாட்கள் முன்பு ஒரு கவிதையை படிக்கும் பொழுது சிரிப்பலை மனதில் பாய்வது உணர முடிந்தது. அதன் சுருக்கத்தை சொல்கிறேன்.....கவிதை வரிகளாய் அல்ல ..

சாந்தமே உருவான சாந்தி மீது மாரியம்மாள் வந்தாள்.... பதினெட்டு ஊர் கூடிய இடத்தில சாந்தி அம்மன் அருள் கொண்டு ஆவேசமாய் இருந்தாள் ... என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்கிறாள்......நான் எப்படி சொல்வேன் ..... ஆவேசமாய் இருந்தாலும்.....அழகை இருக்கும் அவள்(சாந்தி) தான் வேண்டும் என்று....

தமிழ் மொழி அழகாய் தோன்றுகிறது.......இருப்பினும் தமிழன் எங்கும் வெற்றி கோடி நாட்டிட உலக மொழியை கற்ப்போம். இங்குள்ள அரசியல்வாதிகள் தனது ஓட்டு எண்ணிக்கைக்காக பிற மொழிக்கு சிவப்பு கோடி காட்டுவதை நிறுத்த வேண்டும்.